பரசுராமப் படலம் - 1372

bookmark

தயரதன் மனம் வெம்புதல்

மன்னன் உரையை மதியாது பரசுராமன் மேற் செல்லல்
 
1372.    

என்னா அடி விழுவானையும்
   இகழா. எரி விழியா.
பொன் ஆர் கலை அணிவான் எதிர்
   புகுவான் நிலை உணரா.
தன்னால் ஒரு செயல் இன்மையை
   நினையா. உயிர் தளரா.
மின்னால் அயர்வுறும் வாள் அரவு
   என. வெய்துறல் உற்றான்.
 
என்னா  - என்று சொல்லி வேண்டி; அடி விழுவானையும் - (தன்)
பாதங்களில்  வீழ்ந்து வணங்குகின்ற தசரதனையும்;  இகழா -  இகழ்ந்து
(ஒரு  பொருளாக  மதியாமல்);  எரி  விழியா - தீ சிந்துமாறு விழித்து
நோக்கி; பொன் ஆர்கலை  அணிவான்  எதிர்  -  பொன்னாலாகிய
பீதாம்பர ஆடையை அணிந்துள்ள இராமபிரானது  எதிரிலே;  புகுவான்
நிலை    உணரா    -   செல்பவனாகிய   பரசுராமனின்   (கொடிய)
நிலைமையையுணர்ந்து;  தன்னால்  ஒரு செயலின்மையை நினையா -
தன்னால்  இயலக்கூடிய  செயல்   ஒன்றும்   இல்லாமையை  நினைத்து;
உயிர் தளரா - உயிர் தளர்ந்து; மின்னால் அயர்வுறும் வாள் அரவு
என  -   மின்னலினால்   தளர்ச்சியுறும்  கொடிய  பாம்பு   போன்று;
வெய்துறல் உற்றான் - (மனம்) வெதும்புதல் அடைந்தான்  (தசரதன்)

என்னா.     இகழா.  விழியா.  உணரா.  நினையா.  தளரா என்னும்
செய்யா   என்னும்   எச்சங்கள்  உடன்பாட்டுப்   பொருளைத்   தந்து
உற்றான்   எனும்   வினை   முடிபு   கொண்டன.  அடிவிழுவானையும்
என்பதில்  உள்ள  உம்மை   அடிவிழுவானைப்  புறக்கணிக்கவும்  ஒரு
முனிவனால் எப்படி முடிந்தது எனும்  வியப்புத்  தோன்றுமாறு  நின்றது.
சம்பராசுரனை  வென்ற  தோளாற்றல்  வாய்ந்த   தசரதன்.   தவத்தின்
ஆற்றலின்  முன்  ஒன்றும்  செய்ய   இயலாமல்   தவித்தான்  என்பது
தோன்ற.   “தன்னால்   ஒரு  செயலின்மையை   நினையா”   என்றார்.
மின்னலின் ஒளி பாம்புகளை மிகப் பாதிக்கும் என்பது மரபு.        24