பரசுராமப் படலம் - 1364
பரசுராமனை இராமன் யாரெனக் கருதல்
எதிரே வந்த பரசுராமனை. ‘யார்?’ என. இராமன் கேட்டல்
1364.
பொங்கும் படை இரிய. கிளர்
புருவம் கடை நெரிய.
வெங் கண் பொறி சிதற. கடிது
உரும்ஏறு என விடையா.
சிங்கம் என உயர் தேர் வரு
குமரன் எதிர். சென்றான்.
அம் கண் அரசவனும் இவன்
“ஆரோ?” எனும் அளவில்.
பொங்கும் படை இரிய - மகிழ்ந்து செல்கின்ற படைகள்
பயந்தோடும்படி; கிளர் புருவம் கடை நெரிய - பரசுராமன் சினத்தால்
உந்திய புருவங்கள் நுனியில் நெளியவும்; வெங்கண் பொறிசிதற -
கொடுமையுடைய கண்களில் நெருப்புப் பொறி சிதறவும்; கடிது உரும்
ஏறு என விடையா - விரைவாக (விழும்) பேரிடி போலப்
பெருஞ்சினம் கொண்டு; உயர்தேர் வரு சிங்கம் என - உயர்ந்த
தேரில் ஏறி வரும் சிங்கம் போல; குமரன் எதிர் சென்றான் -
சக்கரவர்த்தித் திருக்குமாரனான இராமனின் எதிரே சென்றான்;
அங்கண் அரசு அவனும் - அழகிய கண்களையுடைய
(அனைவர்க்கும்) தலைவனான இராமனும்; இவன் ஆரோ? எனும்
அளவில் - இவன் யாரோ என்று வினாவும் அப்போதே. (தசரதன்)
(அரசன் அடிமேல் உறவிழலும் எனும் அடுத்த பாடலின் தொடரோடு
முடியும்.)
புருவ நுனி நெளிதலும். கண் பொறி பறத்தலும் ஆகிய சினத்தின்
மெய்ப்பாடுகளைக் கண்டு படைகள் தாம் அஞ்சி ஓடினவே தவிர.
இராமன் மகிழ்வோடே. அச்சம் அணுத்துணையும் இன்றி
எதிர்கொண்டான் எனக் காட்ட “அங்கண் அரசு அவனும்” என்றார்.
அச்சம் கண்ணில் விளங்குமாதலின். விடையா - விடைத்து.
பெருஞ்சினம் கொண்டு. வினைஎச்சம் “விடைத்து வரும் இலங்கைக்
கோன்” (தேவா: 159:10) எனல் காண்க. 16
