பரசுராமப் படலம் - 1359

bookmark

1359.    

பாழிப் புயம் உயர் திக்கிடை
   அடையப் புடை படர.
சூழிச் சடைமுடி விண் தொட.
   அயல் வெண் மதி தோற்ற.
ஆழிப் புனல். எரி. கால். நிலம்.
   ஆகாயமும். அழியும்
ஊழிக் கடை முடிவில். திரி
   உமை கேள்வனை ஒப்பான்;
 
பாழிப்     புயம்-  வலிமைவாய்ந்த  தோள்கள்;  உயர்திக்கிடை
அடையப்புடை   படர   -  உயர்ந்த  திக்குகளின்  எல்லையிடையே
சென்றடையுமாறு  பக்கங்கள்  விரியவும்;  சடைமுடிச்  சூழி விண்முடி
தொட   -   சடையை  முடித்துக்  கட்டிய  தன்  உச்சி   விண்ணின்
முகட்டைத் தொடவும்; வெண்மதி அயல் தோன்ற - வெண்ணிறமுள்ள
நிலா முடியின் அருகிலே தோன்றவும்;ஆழிப்புனல். எரி. கால். நிலம்.
ஆகாயமும் அழியும் ஊழிக் கடை முடிவில் - கடல் வடிவான நீரும்.
நெருப்பும்.  காற்றும்.  நிலமும்.  வானமும்  ஆகிய (பஞ்ச  பூதங்களும்)
அழிகின்ற  ஊழியாகிய  யுகமுடிவுக் காலத்தில்; திரிஉமை  கேள்வனை
ஒப்பான்    -    நடம்புரிகின்ற   உமையம்மையின்    மணாளனாகிய
சிவபெருமானை ஒப்பான் ஆகவும் -

“சடை     முடிச்சூழி  விண்முடி  தொட” எனப் பொருள் இயைபுக்
கேற்ப மாற்றிக் கூட்டுக. “ஊழிக்கடை முடிவில் தனி  உமை  கேள்வன்”
என்பதிலும்.  “திரி  உமை கேள்வன்” என்பதே  பொருள்  சிறப்பதால்.
அப்பாடமே  கொள்ளப்பட்டது.  தோன்றிய   முறைக்கேற்ப.  ஆகாயம்.
கால்.   அனல்.   புனல்.   நிலம்  எனக்  கூறலே   முறை   யாயினும்
செய்யுளாதலின் பிறழக் கூறப் பெற்றது.  ஊழி  முடிவில்.  சிவபெருமான்
சர்வ  சங்காரனாய். ஊழிக் கூத்தாடுகையில்  ஐம்  பூதங்களும்  அழியும்;
அப்போது  அம்மைகாண நடமாடுவான்  என்பது  பற்றி.  “ஆழிப்புனல்.
எரி.  கால்.  நிலம்.  ஆகாயமும்  அழியும் ஊழிக் கடை  முடிவில் திரி
உமைகேள்வனை   ஒப்ப”   என்றார்.  புயம்   திக்கடைய   விரியலும்.
சடைவிண்    தொடுதலும்.     அயலே     வெண்மதி    தோன்றலும்
சிவபிரானுக்கும் பரசுராமனுக்கும் சிலேடையாயின.                  11