பரசுராமப் படலம் - 1354
நிமித்திகன் இடையூறு நிகழ்ந்து நீங்குமெனல்
நிமித்திகன் விடை
1354.
நின்றே. நெறி உணர்வான். ஒரு
நினைவாளனை அழையா.
‘நன்றோ? பழுது உளதோ?
நடு உரை நீ. நயம்’ என்ன.
குன்றே புரை தோளான் எதிர்.
புளளின் குறி கொள்வான்.
‘இன்றே வரும் இடையூறு; அது
நன்றாய்விடும்’ என்றான்.
நின்று - தசரதன் (இவ்வாறு) நின்று; நெறியுணர்வான் ஒரு
நினைவாளனை அழையா - சகுன நூலின் நெறி முறைமையை நன்கு
அறிகின்ற ஆய்வாளன் ஒருவனை (நிமித்திகனை) அழைத்து;
‘நன்றோ? பழுது உளதோ? - (இச்சகுனத்தால்) ‘நன்மை விளையுமா?
தீமை விளையுமா?; நீ நயம் நடு உரை’ - நீ விளைவை
நடுநிலைமையுடன் சொல்வாய்; என்ன - என்று வினாவ; குன்றே புரை
தோளான் -எதிர் - மலையினையே போன்ற தோள்களையுடைய
அத்தசரத வேந்தனின் எதிரில்; புள்ளின் குறி கொள்வான் -
பறவைகளின் (நிமித்தக்) குறிகளை அறிபவனாகிய அந்நிமித்திகன்;
இடையூறு இன்றே வரும் -இடையூறு ஒன்று இப்பொழுதே வரும்;
அது நன்றாய் விடும் என்றான் - (வந்த விரைவிலேயே)
அவ்விடையூறு நன்றாகவும் முடிந்துவிடும் என்று கூறினான்.
நிமித்தம் - காரணம். சகுனத்தின் காரணங்களை அறிந்து கூறுவான்
நிமித்திகன் ஆதலின். அவனை “நெறியுணர்வான் நினைவாளன்”
என்றார். அழையா - செய்யா என்னும் வினை எச்சம். காகம்
முதலியன இடம் ஆதலின். இடையூறு வரும் என்றும். மயில் முதலிய
வலம் ஆதலின் அது நன்மையாய் முடியும் என்றும் நிமித்திகன்
கூறினான். 6
