பண்டைக்காலத் தமிழகத்தில் மருந்து
பண்டைக்காலத் திராவிட மக்களாகிய தமிழர்கள், மருந்தையும் மருந்துப் பொருளையும் பயன்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நிலையில் சிறந்து காணப்பட்டார்கள் என்பதற்கு, சிந்துவெளி நாகரிகம் பற்றிய அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்கள் சான்றாக அமைகின்றன. இன்றைய தமிழ் மருத்துவர்களும் ஆயுர்வேத மருத்துவர் களும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்ற சிலாசித்து " மான்கொம்பு, பவழம்" தாளகம் போன்ற மருந்துப் பொருள்கள் அங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், வேதகாலத்திற்கும் முன்பாகவே பழந்திராவிட மருத்துவம், இந்தியா முழுவதும் பரவி இருந்திருக்கிறது. அது பின்னாளில், மொழி, இடம், கொள்கை ஆகியவற்றிற் கேற்பப் பிரிந்து சித்த மருத்துவம், ஆயுர்வேதம் என இரண்டு நிலைகளில் வளர்ந்தது என்பர்.
அறுவை மருத்துவக் கருவி:
புதை பொருள் அகழாய்வு ஆராய்ச்சியின்படி, சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள், அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பது தெரியவருகிறது. அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்தினால்" அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்னும் அறிவியல் உண்மையைப் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகிறது. புதைந்த நாகரிக இனத்து மக்கள் மருந்து, மருத்துவம்" அறுவை மருத்துவம் ஆகியவற்றை அறிந்தும் பயன்படுத்தியும் வந்திருந்தனர் என்பதை உறுதிப் படுத்துகிறது.
அறுவை மருத்துவம்:
போர்க் காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து" மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.
"மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்" – பதிற்றுப்பத்து 5: 2:1-3
நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம்.
மருந்துப் பொருள்கள்:
இரசம், தாளகம் ஆகிய இரண்டும் சீனம், கிரேக்கம், இத்தாலி போன்ற மேலை நாடுகளில் உற்பத்தியாகின்றன. ஆனால் சங்க காலப் புலவராகிய நற்றத்தனார் – தாளகம், நளிர் சுரத்திற்கு மருந்தென்று குறிப்பிடுகின்றார்.
சக்தி பீசம் என்று கூறப்படுகின்ற கந்தகம், கந்தக பற்பம் என்னும் மருந்தைப்பற்றி மருத்துவ ஆற்றுப்படை என்னும் சங்க பாடல் குறிப்பிடுகிறது. கந்தகத்தினால் செய்யப்படுகின்ற மருந்து பால்வினை நோய்க்கும் உணவினால் ஏற்படக்கூடிய நஞ்சு நோய்க்கும் மருந்தாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இங்குலிகம் (சாதிலிங்கம்):
தமிழில் இங்குலிகம் என்று கூறப்படுகின்ற சாதிலிங்கம் சீனத்திலிருந்து இறக்குமதியாவதாகக் கூறப்படுகிறது. அந்த சாதிலிங்கம் பற்றிய குறிப்பு சங்க கால நூலில் காணப்படுவது சிறப்பாகும்.
"அஞ்சனக் குன்றுஏய்க்கும் யானை அமர் உழக்கி
இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே - செங்கண்
வரிவரால் மீன் பிறழும் காவிரி நாடன்
பொருநரை அட்ட களத்து" (களவழி நாற்பது – 7 )
சிவந்த கண்களையுடை வரால் மீன்கள் தவழுகின்ற காவிரி நாடனாகிய சோழன் செங்கணான், தன் பகைவரோடு போர் புரிந்த போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் கருமையான குன்றைப் போன்ற யானை, இங்குலிகக் குன்றம் போல் தோன்றுகின்றது! என்று, புலவர் பொய்கையார் பாடுகின்றார்! என்றால், சங்க காலத்தில் சாதிலிங்கத்தின் பயன்பாடு அதிக அளவில் இருந்தது என்றே கருதலாம்.
மருத்துவப் பூக்கள்:
சங்க இலக்கியமான பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டை இயற்றிய கபிலர்" 98 வகையான பூக்களைக் குறிப்பிடுகிறார். அவை அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்ட மரம், செடி" கொடிகளாகும். அந்நூலுள், 98 வகையான பூக்களைக் கூற வேண்டிய சூழல் நேராமலேயே அவை உரைக்கப்பட்டிருப்பதாக அந்நூலைக் கற்பார் உணர்வர். அவர்" அவ்வாறு உரைக்கக் காரணம்? தானறிந்த வற்றைப் பிறரும் அறிந்து இன்பமடைய வேண்டுமென்ற நோக்கமே எனலாம்.
குரல் வளம் தரும் மருந்து:
சேறை. அறிவனார் என்னும் இசை மேதையால் இயற்றப் பெற்றது பஞ்சமரபு. இசை "முழவு, தாளம்" கூத்து, அபிநயம் என்னும் ஐந்துக்கும் இலக்கணமாக அமைவது. இந்நூல், இசைப் பாடகர்கள் குரல் வளம் பெற மருந்தும் உரைக்கிறது.
"திப்பிலி தேன்மிளகு சுக்கினோ டிம்பூரல்
துப்பில்லா ஆன்பால் தலைக்காடைஒப்பில்லா
வெந்நீரும் வெண்ணெயு மெய்ச் சாந்தும் பூசவிவை
மன்னூழி வாழும் மகிழ்ந்து" – பஞ்சமரபு. செய்.63
என்னும் இச்செய்யுள் திப்பிலி, தேன்" மிளகு, சுக்கு" இம்பூரல், பசுவின்பால்" தலைக்காடை, மெய்ச்சாந்து இவற்றை வெண்ணெய் விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்துப் பூசிவரக் குரலின் வளம் அதிகப்படும் என்கிறது.
பஞ்சமரபு என்னும் இந்நூல், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லாரால் அதிகமான மேற்கோள்களுக்காகப் பயன்பட்ட நூல். இது" சிலப்பதிகார காலத்திற்கும் முற்பட்ட சங்க இலக்கியக் காலத்தை ஒட்டிய காலத்தில் தோன்றிய நூல் என்பது குறிப்பிடத் தக்கது
