நாட்டுப் படலம் - 91
அத்தேசம் எல்லை காண்பரியது எனல்
91.
சோலைமா நிலம் துருவி, யாவரே
வேலை கண்டு தாம் மீள வல்லவர்?-
சாலும் வார் புனல் சரயுவும், பல
காலின் ஓடியும் கண்டது இலையே!
சோலை மாநிலம் துருவி- சோலைகள் சூழ்ந்த அக் கோசல
நாட்டைத் துருவிச் சென்று; வேலை கண்டு தாம் மீள வல்லவர்
யாவரே- அதன் எல்லையைக் கண்டு மீண்டுவர வல்லவர் யாருளர்?:
சாலும் வார்புனல் சரயவும்- மிகுந்த நீரை உடைய அந்நாட்டு
நதியாகிய சரயு நதியும்; காலின் ஓடியும் கண்டதில்லை- பல
கால்வாய்களால் ஓடிச் சென்றும் அந்த நாட்டின் எல்லையைக்
கண்டதில்லை.
பல கால்களால் ஓடிச் சென்றும் சரயு நதியால் காணமுடியாத அந்த
நாட்டின் எல்லையை, இரு கால்களை உடைய மனிதரால் எப்படிக்
காணமுடியும்! காணமுடியாது என்பது கருத்து. இரண்டு காலுள்ள
உயர்திணைப் பொருள்களாலும் பல கால்களுள்ள அஃறிணைப்
பொருள்களாலும் காணக் கூடாத எல்லையுடைய கோசல தேயம்;
இராமசாமி நாயுடு உரை விளக்கம்.
வேலை: எல்லை. கால்: வாய்க்கால், துருவி: தேடி. இதனால் கோசல
நாட்டின் பரப்பு கூறப்பட்டது. 60
