நாட்டுப் படலம் - 89
மகளிர் மக்களுக்கு மாலையிற் பாலூட்டுதல்
சேய்க்கு ஊட்டும் செங்கை
89.
தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங் கை, பங்கயம்
வாய் நிலா உறக் குவிவ மானுமே.
தாலி ஐம்படை தழுவு மார்பிடை - ஐம்படைத் தாலி
அணிந்திருக்கும் மார்பிலே; மாலை வாய் அமுது ஒழுகும் மக்களை-
சீராக, வாயிலிருந்து ‘சொள்ளு’ ஒழுகும் குழந்தைகளுக்கு; பாலின்
ஊட்டுவார் செங்கை- பாலமுதைப் புகட்டும் பெண்களின் அழகிய
கைகள்; பங்கயம் வாய் நிலாவுறுக் குவிவ மானுமே.-தாமரை மலர்கள்,
நிலவு எழுதலால் குவிவதை ஒத்திருக்கும்.
ஐம்படைத் தாலி அணி செய்யும் மார்பிலே சொள்ளு நீர் வழியும்
தம் குழந்தைகளுக்குத் தாய்மார்கள் பால் கலந்த சோறு
ஊட்டுகிறார்கள். அப்போது குவிந்திருக்கும் அவர்களின் கைகள் நிலா
எழுந்ததால் குவிந்த தாமரை மலர்களை ஒத்திருக்கும் என்பது கருத்து.
ஐம்படை: திருமாலின் ஐந்து படைகள். காக்கும் தெய்வமான திருமால்,
தம் குழந்தைகளுக்கு நோய் முதலியன வராது காக்கவேண்டுமென-
இந்த ஐம்படைத்தாலியைக் குழந்தைகளுக்கு அணிவிப்பதுண்டு.
ஐம்படை: சங்கு, சக்கரம், கதை, வில், வாள்.
‘மழலை சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப’ என்பது மணிமேகலை
(மணி 3: 138, 7:56). பால்: பாற்சோற்றுக்கு இலக்கணை. 58
