நாட்டுப் படலம் - 88
எல்லா ஒலியும் உழவர் வாயொலியில் அடங்குதல்
88.
மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்
தாக்கின் தாக்குறும் பறையும், தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும்,- மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே.
மூக்கில் தாக்குறும் மூரி நந்தும்- மூக்கில் வாய்வைத்து ஊதப்படும்
வலிய சங்கு வாத்தியத்தின் ஒலியும்; நேர்தாக்கின் தாக்குறும்
பறையும்- நேரான குறுந்தடியால் தாக்கப்படும் பறையினது ஓசையும்;
வீக்கில் தாக்குறும் தண்ணுமை விளியும்- வாரால் பிணிக்கப்பட்ட
மத்தள முழக்கமும்; மள்ளர்தம் வாக்கில் தாக்குறும் ஒலியில் மாயும்-
உழவர்கள் உழவு மாடுகளை அதட்டும் ஒலிக்குள்ளே அடங்கிவிடும்.
சங்கு, பறை, மத்தளம் இவைகளின் ஓசை உழவர்கள்
ஆரவாரத்திலே அடங்கிவிடும் என்பதால் உழவர்களது ஆரவார
ஒலியே ஓங்கி நிற்கும் என்பது கருத்து. மூக்கு என்றது சங்கின்
கரிமுகத்து நுனியை. ஒன்றில் மற்றொன்று அடங்கும் என்பதால் இது
மறைவணியாகும். 56, 57 இரு பாடல்களிலும் விழாச் சிறப்பும்,
வேள்விச் சிறப்பும் கூறினார். 57
