நாட்டுப் படலம் - 87
விழாவும் - வேள்வியும்
87.
கூறு பாடலும், குழலின் பாடலும்,
வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,
‘ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம்’ என,
சாறும் வேள்வியும் தலைமயங்குமே.
கூறு பாடலும்- இசை வல்லுநர் பாடுகின்ற வாய்ப்பாட்டும்; குழலின்
பாடலும்- புல்லாங் குழலால் இசைக்கும் பாட்டும்; வேறு வேறு நின்று-
தனித்தனியாக நின்று; இசைக்கும் வீதிவாய்- ஒலிக்கும் வீதிகளிலே;
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம்என- ஒரு ஆறு, மற்றொரு
ஆற்றுடன் வந்து எதிர்ப்பட்டதெனக் கூறுமாறு; சாறும் வேள்வியும்
தலை மயங்கும்- விழாவுக்காகவும் திருமணத்துக்காகவும் வரும் மக்கள்
கூட்டம் கலக்கும்.
சாறு: விழா. வேள்வி: திருமணம்; யாகமென்றும் கொள்ளலாம்.
பாட்டொலியும், குழல் ஓசையும் தனித்தனியே கேட்கும் வீதிகளில்
மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும் என்றார். விழாக்கள் எனவும்
வேள்விக்கெனவும் மக்கள் கூடினர் என்பது கருத்து. 56
