நாட்டுப் படலம் - 85
பண்டங்கள் பெய்த பண்டிகள்
85.
எள்ளும், ஏனலும், இறுங்கும், சாமையும்,
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்,
அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்,
தள்ளும் நீர்மையின், தலைமயங்குமே.
எள்ளும் ஏனலும் இறுங்கும் சாமையும் கொள்ளும் - எள்ளும்,
தினையும், சோளமும், சாமையும், கொள்ளும்; கொள்ளையில்
கொணரும் பண்டியும்- மிகுதியாகக் கொண்டு வரும் வண்டிகளும்;
அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்- சேறு நிறைந்த
உப்பளத்திலிருந்து; - உப்பைக் கொண்டு வரும் வண்டிகளும்;
துள்ளும் நீர்மையில் தலை மயங்கும்- பாரமிகுதியால் இயல்பாக
ஓட்டிச் செல்ல இயலாது ஆட்கள் தள்ளும் தன்மையால் ஒன்றுடன்
ஒன்று கலப்பதாகும்.
தலை மயங்கும்: தம்மில் ஒன்றுபட்டுக் கலக்கும். இதற்கு இடம்
மாறுபடும் என்று பொருள் கூறுவதுமுண்டு. ஓரிடத்தில் விளைந்த எள்
முதலியவை அவை விளையாத வேறு இடங்களுக்குக் கொண்டு
செல்லப்படுவதால் “இடம் மாறும்” என்பதும் பொருந்தும். 54
