நாட்டுப் படலம் - 68

bookmark

அன்ன சத்திரங்களின் இயல்பு

அன்ன சத்திரம்
 
68.

பிறை முகத் தலை, பெட்பின், இரும்பு போழ்,
குறை நறைக் கறிக் குப்பை, பருப்பொடு,
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை,
உறைவ- கொட்பின் ஊட்டிடம் தோறெலாம்
 
ஊட்டு  இடம்தோ றெலாம்- ஆரவாரம் மிக்கனவும் (வந்தவருக்கு)
உணவு   வழங்குவனவுமாகிய    அறச்சாலைகளிலெல்லாம்;  பெட்பின்
பிறைமுகத்  தலை  இரும்பு  போழ்- விருப்பத்துடன் பிறை வடிவான
தலையை  உடைய  அரிவாளால்  பிளக்கப்பட்டு; குறை நறைக் கறிக்
குப்பை     -    திருத்தப்பட்ட    நறுமணமுடைய    காய்கறிகளின்
குவியலும்; பருப்பொடு   நிறை   வெண் முத்தின் நிறத்து அரிசிக்
குவை-பருப்பு வகைகளும் நிறைந்த   வெண்முத்துப்  போன்ற  அரிசிக்
குவியல்களும்; உறைவ- கிடக்கின்றன 

பணிசெய்வோர்,   உணவு நாடி வருவோர், உண்டு மீள்வோர் ஆகிய
பல்வேறு      கூட்டத்தினரின்   ஆரவாரம்   அன்ன   சத்திரங்களில்
பெருகியுள்ளன.   இரும்பு இங்கே அரிவாள்மணை. குறை: காய்கறிகளின்
அரிந்த துண்டுகள்.   முத்துக் குவித்தது போல அரிசிக் குவியல்கள்.

ஆரவாரத்தின்      மிகுதியும், திருத்திய காய்கறிக் குவியல், அரிசிக்
குவியல்     ஆகியன      சமையற்    பணியின்    இடையறாமையும்
புலப்படுத்துகின்றன.  நிறை    அரிசிக்  குவை, வெண் முத்தின் நிறத்து
அரிசிக் குவை எனப் பிரித்துக் கூட்டிப் பொருள் அறிக.           37