நாட்டுப் படலம் - 64
64.
வள்ளி கொள்பவர் கொள்வன, மா மணி;
துள்ளி கொள்வன, துங்கிய மாங்கனி;
புள்ளி கெள்வன, பொன் விரி புன்னைகள்;
பள்ளி கொள்வன, பங்கயத்து அன்னமே.
வள்ளி கொள்பவர்- வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுப்பவர்கள்;
கொள்வன மாமணி- பெறுவது உயர்ந்த மணிகளாகும்; தூங்கிய
மாங்கனி- கிளைகளில் தொங்கும் மாம்பழங்கள்; து(ள்)ளி கொள்வன-
தேன் துளிகளைக் கொண்டிருக்கும்; பொன்விரி புன்னைகள்- பொன்
நிற மகரந்தங்களைப் பரப்பும் புன்னை மலர்கள்; புள்ளி கொள்வன-
புள்ளிகளைப் பெற்றிருக்கும்; அன்னம்- அன்னப் பறவைகள்;
பங்கயத்து- தாமரை மலர்களிலே; பள்ளி கொள்வன- தூங்கியிருக்கும்.
வள்ளிக் கிழங்குபெற நிலந் தோண்டுபவர்க்குப் பெருமதிப்புடைய
மணிகள் கிடைக்கின்றன. சிறந்த மாங்கனி: தேனெனச் சொட்டும் சாறு
கொண்டவை.
....துள்ளி என்ற சொல்லுக்கு ஆமை என்ற பொருளும் உண்டு.
அவ்வாறு கொண்டால் ஆமைகள் உண்ணுவதற்கு மாங்கனி
கிடைக்குமெனப் பொருள் உரைக்க.
வள்ளி, புன்னை, பங்கயம் - ஆகு பெயர்கள். 33
