நாட்டுப் படலம் - 62

bookmark

தினை முதலியவற்றிலிருந்து ஒலிப்பனஇவையெனல்

62.

துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
உரும் இடித்தெனத் தாக்குறும் ஒல் ஒலி
வெருவி, மால் வரைச் சூல் மழை மின்னுமே.
 
துருவை  மென் பிணை- செம்மறி இனத்தின் மென்மையான பெண்
ஆடு;  ஈன்ற-  பெற்ற;  துளக்கு இலா- அச்சம் காரணமான அசைதல்
இல்லாதனவும்;   வரி   மருப்பு   இணை-  வரிகள்  அமைந்த  இரு
கொம்புகளை உடையனவும்; வன் தலை ஏற்றை- வலிய தலைகளையும்
உடைய  கடாக்கள்;  வான் உரும் இடித்தென- மேகத்தில் உள்ள இடி
இடித்ததைப்  போல; தாக்குறும்  ஒல்  ஒலி வெருவி- ஒன்றை ஒன்று
முட்டுதலால் எழும் ஒல்லென்ற ஒலி கேட்டு அஞ்சி; மால் வரைச் சூல்
மழை- பெரிய மலையில்   படிந்துள்ளதும் சூல் கொண்டதுமான மேகம்;
மின்னும்- மின்னலிடும்.

செம்மறிக்     கடாக்கள் ஒன்றுடன் ஒன்று மோதித் தாக்க. அதனால்
எழும்  ஒலி  கேட்டு     அஞ்சிய மேகங்கள் மின்னும் என்பது கருத்து.
மென்மை   கொண்ட     பெண்  செம்மறியிடத்துப்  பிறந்த  கடாக்கள்
ஆண்மையால்    வன்மை     பெற்றிருப்பதை   நோக்குக.   துருவை:
செம்மறியாடு

முல்லை  (செம்மறி)   குறிஞ்சி  (மலை  முகட்டு  முகில்)  மயங்கிய
திணை மயக்கம். 

துளக்கு,    தாக்கு-முதனிலைத் தொழிற் பெயர்கள் இல்லாத, இல்லா,
இலா; ஈறு கெட்ட  எதிர்மறைப் பெயரெச்சம். ஏற்றை என்பதில் ஐகாரம்
சாரியை   இடித்தென-இடித்தால்    என;  ‘ஒல்’:  ஒலிக்  குறிப்பிடைச்
சொல்.                                                   31