நாட்டுப் படலம் - 61

bookmark

செம்மறிப் போர்

நானில வளமை
 
61.    குற்ற பாகு கொழிப்பன - கோள் நெறி
கற்றிலாத கருங் கன் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்து, தம் முன்றிலில்,
சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே.
 
கோள் நெறி கற்றில்லாத- ஆடவரின் இதயம் கவர்ந்து கொள்ளும்
வழியைக்   கற்றறியாத;  கருங்கண்  நுளைச்சியர்-  கருமை  நிறமான
கண்களை   உடைய   நெய்தல்   நிலத்துப்  பெண்கள்;  குற்ற  பாகு
கொழிப்பன-   தறிக்கப்பட்ட  பாக்கிலிருந்து கொழித்து நீக்கப்படுபவை;
முற்றில் ஆர முகந்து- சிறிய முறங்களில் வாரி வந்து; தம் முன்றிலில்
சிற்றில்  கோலி-  தம்  வீட்டின்  முற்றத்தில்  சிறு வீடு கட்டி; சிதறிய
முத்தமே- சிந்துகின்ற முத்தங்களே யாகும்.

முற்றத்தில்     முத்துக்களைக் கொண்டு பேதைப் பருவத்து சிறுமியர்
சிற்றில்    அமைக்கின்றன. பின்னர் குற்றிய பாக்குகளைச் சிறு முறத்தால்
நிறைய    வாரிக்  கொழிக்கின்றனர். கொழிக்கும் போது நீக்கப் படுவன
எவை?    சிற்றில்     அமைக்க   உதவிய   முத்துகளே   கொழித்து
நீக்கப்படுகின்றன.

நெய்தல்     நிலத்து முத்தையும் மருத நிலத்துப் பாக்கையும் மயங்க
(கலந்திட)ச்    செய்து  இப்பாடலின்  கற்பனை  இயங்குவதால்  திணை
மயக்கம்.


பாகு: இடைக்குறை. கோள்-முதனிலை நீண்ட தொழிற் பெயர்.      30