நாட்டுப் படலம் - 48

bookmark

எருமைப் போர்

48.

எருமை நாகு ஈன்ற செங் கண்
   ஏற்றையோடு ஏற்றை, ‘சீற்றத்து
உரும் இவை’ என்னத் தாக்கி,
   ஊழுற நெருக்கி, ஒன்றாய்
விரி இருல் இரண்டு
   கூறாய் வெகுண்டன; அதனை நோக்கி,
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப,
   மஞ்சுகிற ஆர்க்கின்றாரும்;
 
எருமை   நாகு  ஈன்ற-  பென்  எருமைகள்  பெற்ற;  செங்கண்
ஏற்றையோடு ஏற்றை- சிவந்த கண்களை உடைய கடாவோடு மற்றொரு
கடா; ‘சீற்றத்து உரும்  இவை’  என்னத்  தாக்கி- ‘கோபம் கொண்ட
இடிகள்  இவை’  என்று  சொல்லும்படியாக  மோதி; ஊழுற நெருக்கி-
முறையாக   நெருங்கி;  ஒன்றாய்   வீரி   இருள்-  எங்கணும்  ஒரே
பொருளாய்  விரிந்திருக்கின்ற இருட்பிழம்பு; இரண்டு கூறாய்- இரண்டு
பகுதிகளாகப்  பிரிந்து நின்று; வெகுண்டன- ஒன்றோடு ஒன்று  கோபம்
கொண்டு  பொருதன;  அதனை  நோக்கி-  அந்தப் போரைக் கண்டு;
குஞ்சி  அரி  இனம்  ஆர்ப்ப-  தலை முடியில் அணிந்த மலர்களில்
இருந்த  வண்டுகளின் கூட்டம் (கலைந்து) ஆரவாரம்   செய்யும்படியாக;
மஞ்சு  உற  ஆர்க்கின்றாரும்-  தமது  குரல்  மேகமண்டலம்  வரை
செல்லும்படி ஆரவாரம் செய்பவர்களும்.... 

எங்கும்  பரவியுள்ள ஒரே பிழம்பு இரண்டு கூறாகப் பிரிந்து தம்முள்
மோதுவது  போல எருமைக் கடாக்கள் காணப்படுகின்றன.   ஒரே நிறம்,
ஒரே  தரம்; உருவம் மட்டுமே இரண்டு. அவை மோதிப்  பொருவதைப்
பார்த்து  வீரர்கள்  மகிழ்ந்து ஆர்ப்பரிக்கின்றனர்.   எருமையில் பெண்
நாகு  என வழங்கும். ‘எருமையும் மரையும் பெற்றமும்   நாகே’ (தொல்
பொருள். மரபு 63). எருமை நாகு; இருபெயரொட்டுப்   பண்புத் தொகை.
ஈற்றை என்பதில் ஐகாரம் சாரியை.                            17