நாட்டுப் படலம் - 40
கடல்மீனும் கள்ளுண்டு களித்தல்
40.
ஆலைவாய்க் கரும்பின் தேனும்,
அரி தலைப் பாளைத் தேனும்,
சோலை வீழ்க் கனியின் தேனும்,
தொடை இழி இறாலின் தேனும்,
மாலைவாய் உகுத்த தேனும், -
வரம்பு இகந்து ஓடி, வங்க
வேலைவாய் மடுப்ப - உண்டு,
மீன் எலாம் களிக்கும் மாதோ.
ஆலைவாய்க் கரும்பின் தேனும்- கரும்பாலைகளிலிருந்தும்
பெருகும் தேன் போன்ற கருப்பஞ்சாரும்; அரிதலைப் பாளைத்
தேனும்-கள் இறக்குவோர் அரிந்த பாளையிலிருந்து வடியும் கள்ளும்
சோலைவீழ்க் கனியின் தேனும்- சோலைகளில் பழுத்த பழங்களின்
சாறும்; தொடை இழி இறாலின் தேனும்-தொடுக்கப்பட்ட இடத்தினின்று
வழிகின்ற தேனடைத் தேனும் - மாலை வாய் உகுத்த தேனும் - மலர்
மாலைகளிலிருந்து வடியும் தேனும்; (ஆக இவையெல்லாம்); வரம்பு
இகந்து ஓடி-எல்லை மீறிப் பெருகி ஓடி; வங்க வேலைவாய்
மடுப்ப-கப்பல்கள் இயங்கும் கடலிலே போய்ச் சேர; மீன் எலாம்
உண்டு களிக்கும்- (கடலிலே வந்து கலக்கின்ற அவற்றை)
மீன்களெல்லாம் பருகிக் களிக்கும்.
