நாட்டுப் படலம் - 35
மருதமாகிற மன்னனின் திருவோலக்கம்
35.
தண்டலை மயில்கள் ஆட,
தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க,
குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம்
பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -
மருதம் வீற்றிருக்கும் மாதோ.
தண்டலை மயில்கள் ஆட- சோலைகளிலே மயில்கள் ஆடவும்;
தாமரை விளக்கம் தாங்க- தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி
நிற்கவும்; கொண்டல்கள் முழவின் ஏங்க- மேகங்கள் மத்தளம் போல
ஒலிக்கவும்; குவளை கண் விழித்து நோக்க- குவளைக் கொடிகளில்
மலர்கள் கண்போல் விழித்துப் பார்க்கவும்; தெண் திரை எழினி
காட்ட- நீர்நிலைகளின் அலைகள் திரைச்சீலை போலக் காட்டவும்;
தேம் பிழி மகர யாழின்- தேனை ஒத்த மகர யாழ் இசை போல;
வண்டுகள் இனிது பாட- வண்டுகள் இனிமையாகப் பாடவும்; (இவ்வாறு
இசையும் கூத்தும் பொலிகின்ற அரங்கிலே)- மருதம் வீற்றிருக்கும்-
மருத நாயகி வீறு தோன்ற அமர்ந்திருப்பது போன்றிருந்தது.
உரையாசிரியர்கள் பிறரெல்லாம் மருத வேந்தன் என்றனர்; அது
பொருத்தமே. எனினும், இயற்கையை அன்னை எனப் போற்றும்
மரபினை ஓம்பி இங்கே மருதம் நாயகியாக
உரைக்கப்பட்டது.”.......எதிரே கொலு வீற்றிருக்கும் அரசி மருதாயி
நாச்சி இக்காட்சியைக் கண்டு களிக்கிறாள்” என்பர் பேரா. அ. ச. ஞா.
(கம்பன் கலை - பக்.4). “இந்த இடத்தில் கவிஞன் கையாளும்
உவமை, இயல்புக்கும் மரபுக்கும் ஒத்துக் கற்போர்க்கு இன்பம்
பயப்பதாகும். கொண்டல் முழங்கின் மயில் ஆடும்; குவளை
மலர்ந்திருக்கும் மாலைப் போதில் தாமரை குவிந்துவிடும், இந்த
இயல்பு பிறழாமல் முறைப்படுத்தும் கவிஞன் திறன் துய்ப்பார்க்குச்
சுவை ஊட்டுமன்றோ?” (பக்.5)
தண்டலை; சோலை, குளிர்ந்த இடம் (தண் + தலை) என்ற பொருள்
உடையதாய்ப் பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை. குவளைக் கண் என்பது எதுகை நோக்கிக்
குவளை கண் என நின்றதாகக் கொண்டு பொருள் கூறுதலும் உண்டு.
யாழ்: யாழிசைக்கு ஆகுபெயர். 4
