நாட்டுப் படலம் - 33
மருத வளம்
33.
வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம் பொன்; மேதிக்
குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப்
பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரம்பு எலாம் செந் தேன்; சந்தக்
கா எலாம் களி வண்டு ஈட்டம்.
வரம்பு எலாம் முத்தம்-(வயல்) வரப்புகளிலெல்லம் முத்துக்கள்;
தத்தும் மடை எலாம் பணிலம்- தண்ணீர் பாயும் மடைகளிலெல்லாம்
சங்குகள்; மாநீர்க் குரம்பு எலாம் செம்பொன்- மிகுந்த நீர்ப்
பெருக்குடைய செய்கரை களிலெல்லாம் செம்பொன்; மேதிக் குழி
எலாம் கழுநீர்க் கொள்ளை- எருமைகள் படிகின்ற பள்ளங்களிலெ்லாம்
செங்கழுநீர் மலர்கள்; பரம்பு எலாம் பவளம்- பரம் படித்த இடங்களி
லெல்லாம் பவளங்கள்; சாலிப் பரப்பு எலாம் அன்னம்- நெற்பயிர்
நிறைந்த பரப்புகளிலெல்லாம் அன்னங்கள்; பாங்கர்- அவற்றின்
பக்கங்களில் இருக்கின்ற; கரம்பு எலாம் செந்தேன்- சாகுபடி
செய்யப்படாத நிலங்களி லெல்லாம் செந்தேன்; சந்தக் கா எலாம்
களிவண்டு ஈட்டம்- அழகிய சோலைகளிலெல் லாம் மதுவுண்டு மகிழும்
வண்டுகளின் கூட்டம்;(ஆக இவ்வாறு வளங்கள் அங்கே பெருகியுள்ளன).
பலவகை வளங்களும் கோசல நாட்டில் கொழித்திருந்தன என்பது
கருத்து. பயிர்த்தொழிலுக்கு ஏற்பப் பண்படுத்தாத கரம்பிலும்
செந்தேன் பெருக்கு இருந்தது என்பதொன்றே கோசலத்தின்
வளத்தைப் புலப்படுத்தப் போதுமானது. குரம்பு: செய்கரையாகிய
அணை. சந்தம்: அழகு முதம் முதலான எழுவாய்களுக்கு உள்ளன
என்பது பயனிலையாக உரைக்கப்பட்டது - எச்சப் பயனிலை. 2
