நரேந்திரர் விவேகானந்தராக மாறிய பின்னர் நடந்த சம்பவங்களும், விவேகானந்தர் பாறை பற்றிய கண்ணோட்டமும் (பாகம் நான்கு)

நரேந்திரர் விவேகானந்தராக மாறிய பின்னர் நடந்த சம்பவங்களும், விவேகானந்தர் பாறை பற்றிய கண்ணோட்டமும் (பாகம் நான்கு)

bookmark


நரேந்திரர் விவேகானந்தராக புதிய நாமம் பெறுதல்:-

ராஜஸ்தானத்தில் சுவாமிஜி பயணம் செய்த போது கேத்திரி சமஸ்தானத்தில் தங்கியிருந்தார். கேத்ரி மகாராஜா, சுவாமிஜியின் அன்பிற்குரிய சீடராக இருந்தார். அவர் தமக்குப் புத்திர பாக்கியம் இல்லை என்ற குறை தீர வேண்டுமென்று சுவாமிஜியிடம் வேண்டிக் கொண்டார்.

அப்போது "விரைவில் குழந்தைச் செல்வத்தை அடைவாய்" என்று சுவாமிஜி அவருக்கு அருளாசி வழங்கினார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கேத்ரி மகாராஜா அவர்களுக்கு ஆண் மகவு ஒன்று பிறந்தது. அம்மகனின் பிறந்த நாளன்று சுவாமிஜி வர வேண்டும் என்று மகாராஜா விரும்பினார். அவரை அழைத்து வருவதற்காக தமது காரியதரிசியையும் அனுப்பி வைத்தார்.

அமெரிக்கப் பயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறும் தருணத்தில் சென்னையில் இருந்து கேத்ரி செல்ல இயலுமா என சுவாமிஜி தயக்கம் காட்டினார். மகா ராஜாவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார் எனக் கூறி சுவாமிஜியை, காரியதரிசி கேத்ரிக்கு அழைத்துச் சென்றார்.

கேத்ரி சமஸ்தானமே விழாக்கோலம் கொண்டு இருந்தது. சுவாமிஜி அரண்மனைக்கு வந்ததும் மகாராஜா ஓடோடி வந்து அவரது காலடியில் வீழ்ந்து வணங்கினார்.

இன்னிசை முழங்க, வரவேற்று உபசரித்து உயர்ந்த ஆசனத்தில் சுவாமிஜியை அமரச் செய்தார் மகாராஜா. மகாராஜா அங்கு கூடியிருந்த பிரமுகர்கள், அதிகாரிகள், அனைவரிடமும் சுவாமிஜியின் அருளாசியால் தமக்குப் புத்திர பாக்கியம் கிடைத்ததாகவும் நன்றியோடு கூறி கண்ணீர் சொரிந்தார். சுவாமிஜி அமெரிக்கா சென்று இந்திய நாட்டின் சானாதன தர்மத்தை எடுத்துரைக்கப் போகிறார் என்று மகாராஜா கூறியதும் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

கேத்ரி மன்னரின் குழந்தைக்கு சுவாமிஜி ஆசி வழங்கினார். அக்குழந்தையின் பெயர் சூட்டு விழாவும் இனிதே நடைபெற்றது.

இது காரும் பலப் பல பெயர்களில் சுவாமிஜி அழைக்கப்பட்டு வந்தார். இனி அவரை 'விவேகானந்தர்' என்ற திருநாமத்தாலேயே அழைப்போம் என்று கேத்ரி மகாராஜா தமது புத்திரனின் நாமகரண வைபவத்தன்று சுவாமிஜிக்கு புதிய திருநாமம் சூட்டினார். சுவாமிஜியும் அன்போடு அதனை ஏற்றுக் கொண்டார். அன்று முதல் விவேகானந்தர் என்று அழைக்கப்பட்டவர் ஆனார். அத்துடன் சுவாமிஜி என்றும் போற்றப்பட்டார்.