நரேந்திரரின் பிறப்பை ஒட்டிய ஒரு கதை

நரேந்திரரின் பிறப்பை ஒட்டிய ஒரு கதை

bookmark

விஸ்வநாத தத்தர் கல்கத்தா, உயர்நீதி மன்றத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி புவனேஸ்வரிதேவி. விஸ்வநாத தத்தருக்கு வங்காளம், ஆங்கிலம், பாரசீகம் ஆகிய மொழிகளில் நல்ல தேர்ச்சி இருந்தது.

விஸ்வநாத தத்தர் மேலைநாட்டு நாகரிகத்தைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டவர். மேலும் அவரிடம் ஆன்மீகம், முற்போக்குச் சிந்தனைகள், சமூகநலப் பணிகளில் ஈடுபாடு, ஏழைகளிடம் அன்பு ஆகிய குணங்களும் இருந்தன.

புவனேஸ்வரிதேவி அரசர் குடும்பத்திற்கு உரிய பெருந்தன்மை உடையவர். அவர் உயர்ந்த இந்துப் பெண்மணிக்கு உரிய தெய்வீகக்குணங்களும், புத்திக்கூர்மையும், தீவிர ஆன்மிக நாட்டமும் கொண்டிருந்தார்.

புவனேஸ்வரிதேவி சிவனிடம் செய்த பிரார்த்தனை: புவனேஸ்வரிதேவி நாள்தோறும் தவறாமல் சிவபூஜை செய்வது வழக்கம். அத்தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். எனினும் புவனேஸ்வரி தேவியார், "தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்' என்று காசி திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் விரேஸ்வர் சிவபெருமானிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தார்.

நரேந்திரர் பிறப்பு: ஒரு நாள் புவனேஸ்வரி தேவி உறங்கிக் கொண்டிருந்தபோது, சிவபெருமானைக் கனவில் கண்டார். அந்தக் கனவில் சிவபெருமான், தானே புவனேஸ்வரி தேவிக்குக் குழந்தையாக வந்து பிறக்கபோவதை உணர்த்தினார்.

இந்த அனுபவத்திற்குப் பிறகு சிவபெருமானின் அருளால், புவனேஸ்வரி தேவிக்கு 1863 ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி, பொங்கல் அன்று ஓர் ஆண்டு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தான் நரேந்திரர்.

தாயின் மடியில்: சிறுவயதில் நரேந்திரனிடம் விளையாட்டுத்தனமும் பிடிவாத குணமும் மிகுந்திருந்தன. நரேந்திரனைச் சுருக்கமாக "நரேன்' என்று அழைத்தார்கள்.

நரேன் சிறுவனாக இருந்தபோது ஏதாவது குறும்புகள் செய்வான். அது போன்ற சமயங்களில் அவனுடைய தாய், "சிவ சிவா!' என்று சொல்லிக் கொண்டே, நரேன் தலையில் தண்ணீர் ஊற்றுவார். உடனே, அவன் குறும்புகள் செய்வதை நிறுத்தி அமைதியாகிவிடுவான்.

புவனேஸ்வரிதேவி சிறுவன் நரேந்திரனுக்கு ராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கூறினாள். அந்தக் கதைகள் நரேனின் குழந்தை உள்ளத்தில் நன்கு பதிந்தன.

அவனுக்கு ஸ்ரீராமரிடமும், சீதையிடமும் பக்தி ஏற்பட்டது. அதனால் அவன் ஸ்ரீராமன், சீதை திருவுருவங்களை வைத்து வழிபட்டான்.

தியானம்: தியானம் செய்வதில் சிறுவன் நரேந்திரனுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அவன் ஒரு சமயம் தன் அருகில் பாம்பு வந்தது கூட தெரியாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.

நரேந்திரன் விளையாட்டு, இசை, கல்வி என்று எல்லாவற்றிலும் வல்லவனாக இருந்தான்.

நரேனின் உதவும் மனம்: சந்நியாசிகளுக்கும், ஏழைகளுக்கும் உதவும் மனப்பான்மை, சிறு வயதிலேயே நரேந்திரனிடம் காணப்பட்டது. அவன் ஏழை எளியவர்கள் எதை கேட்டாலும், வீட்டில் இருப்பதை எடுத்துக் கொடுத்து விடுவான். இதைத் தடுப்பதற்கு நரேன் வீட்டில் இருந்தவர்கள், அவனை ஓர் அறையில் வைத்து பூட்டிவிடுவார்கள். இருந்தாலும் அவன் கொடுப்பதை நிறுத்தாமல், ஜன்னல் வழியாகப் பிச்சைக்காரர்களைக் கூப்பிட்டு, அறையிலிருந்த துணி போன்றவற்றை அவர்களிடம் தூக்கிப்போட ஆரம்பித்தான்.

சிறுவன் நரேந்திரன் பெற்ற புத்த தரிசனம்: ஒருநாள் சிறுவன் நரேந்திரன் தியானத்தில் ஆழ்ந்திருந்தான். அப்போது அவனுக்கு புதுமையான ஓர் அனுபவம் ஏற்பட்டது. அதைப் பற்றி பிற்காலத்தில் நரேந்திரர், சரத் (சுவாமி சாரதானந்தர்) போன்ற ராமகிருஷ்ணரின் சீடர்களிடம் ஒரு நாள் இவ்விதம் தெரிவித்தார்:

"ஒருநாள் நான் என் அறையின் கதவைத் தாளிட்டுவிட்டு, தியானத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது என் முன்பு சந்நியாசி ஒருவர் திடீரென்று தோன்றினார். அவர் எனக்குச் சற்று தூரத்தில் நின்றார். அவரது பேரொளியால், அந்த அறை முழுவதும் ஒளி வெளிச்சமாக இருந்தது.

அவர் தலை மழிக்கப்பட்டிருந்தது, காவி உடை அணிந்திருந்தார், கையில் கமண்டலமும் தடியும் வைத்திருந்தார்.

அவரது முகத்தில் சலனங்கள் எதுவும் இல்லாமல் பேரமைதி குடிகொண்டிருந்தது. அவர் முகத்தில் தெரிந்த பற்றற்ற இயல்பும், அகநோக்கும் அப்படியே என் மனதை ஈர்த்தன.

அவர் என்னிடம் ஏதோ சொல்ல விரும்புபவர் போல், என்னையே பார்த்தபடி மெதுவாக அடியெடுத்து வந்தார். ஆனால் என்னை பயம் பிடித்துக் கொண்டது. ஆதலால் விரைந்து இருக்கையிலிருந்து எழுந்து, கதவைத் திறந்துகொண்டு வேகமாக வெளியே சென்று விட்டேன்.

மறுகணம், "ஏன் இந்த பயம்?' என்று நினைத்து என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டு அவர் சொல்வதைக் கேட்பதற்காக மீண்டும் என் அறைக்குள் சென்றேன். ஆனால் அங்கு யாருமில்லை. நான் நீண்ட நேரம் காத்திருந்தும் பலனில்லை. "அவர் சொல்லப்போவதைக் கேட்காமல் ஓடுகின்ற புத்தி, எங்கிருந்து தான் எனக்கு வந்ததோ!' என்று என்னையே நான் நொந்துகொண்டேன். எத்தனையோ சந்நியாசிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அத்தகைய அபூர்வமான முகத்தை நான் பார்த்ததில்லை.

அதன் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை. "மறுபடியும் அவரைப் பார்த்தால் பயப்படக்கூடாது. அவரிடம் பேச வேண்டும்' என்று பலமுறை நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் மீண்டும் அவர் என்னிடம் வரவே இல்லை.

அந்த முகம் என் மனதில் நிரந்தரமாகப் பதிந்துவிட்டது. அன்று நான் பார்த்தது புத்தர்தான் என்று எனக்குத் தோன்றுகிறது".