நம்மாழ்வார்
நம்மாழ்வார் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். இவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழ்ப்படுகிறார். கம்பர் இயற்றிய "சடகோபர் அந்தாதி" எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார்.
நம்மாழ்வார் வாழ்க்கை (சிறு குறிப்பு) :-
திருநெல்வேலிச் சீமையில் தாமிரபரணிக்கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் வசித்த காரியார் மற்றும் உடைய நங்கைக்குத் திரு மகனாராக நம்மாழ்வார் கலி பிறந்த 43 ஆவது நாளில் சூத்திர குலத்தில் அவதரித்தார். இவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியனவற்றைச் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் "சடகோபன்" என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்.
பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். வடதிசை யாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவி என்பவர் அயோத்தியில் இருந்த போது தெற்குத் திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தென்திசை நோக்கிப் பயணித்தார். மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதை அறிந்து அவரை சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு. மாறன் கண்விழித்த உடன் மதுர கவி கேட்ட "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" கேள்விக்கு "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் அளித்தார் நம்மாழ்வார்.
நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் ஒரு பார்வை:-
நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு: திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகிய இவையே. இவை அனைத்தும் ரிக், யசுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்திருப்பதாக பெரியோர்கள் சொல்வார்கள். இந்த திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 7 பாசுரங்களும் பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார்.
நம்மாழ்வாரை குறிக்கும் வேறு சில பெயர்கள் பின்வருமாறு :-
சடகோபன், மாறன், காரிமாறன், பராங்குசன், வகுளாபரணன், குருகைப்பிரான், குருகூர் நம்பி, திருவாய்மொழி பெருமாள், பெருநல்துறைவன், குமரி துறைவன், பவரோக பண்டிதன், முனி வேந்து, பரப்ரம்ம யோகி, நாவலன் பெருமாள், ஞான தேசிகன், ஞான பிரான், தொண்டர் பிரான், நாவீரர், திருநாவீறு உடையபிரான், உதய பாஸ்கரர், வகுள பூஷண பாஸ்கரர், ஞானத் தமிழுக்கு அரசு, ஞானத் தமிழ் கடல், மெய் ஞானக் கவி, தெய்வ ஞானக் கவி, தெய்வ ஞான செம்மல், நாவலர் பெருமாள், பாவலர் தம்பிரான், வினவாது உணர்ந்த விரகர், குழந்தை முனி, ஸ்ரீவைணவக் குலபதி, பிரபன்ன ஜன கூடஸ்தர், மணிவல்லி, பெரியன் ஆகிய இவை யாவும் நம்மாழ்வாரின் மற்றும் சில பெயர்கள் ஆகும். நம்மாழ்வார் ஈழவர் எனப்படும் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தில் பிறந்தவர் என்றும் கூறப்படுகிறது.
