நகர் நீங்கு படலம் - 1928
தாய்மார் வாழ்த்துதல்
1928.
ஏத்தினார், தம் மகனை, மருகியை;
வாழ்த்தினார், இளையோனை; வழுத்தினார்,
‘காத்து நல்குமின், தெய்வதங்காள்!’ என்றார்-
நாத் தழும்ப அரற்றி நடுங்குவார்.
நாத் தழும்ப - நா காய்ப்பு ஏறும்படி; அரற்றி - அழுது;
நடுங்குவார் - நடுங்கும் அத்தாயர்; தம் மகனை, மருகியை - தம்
மகனாகிய இராமனையும் மருகியாகியசீதையையும் ; இளையோனை -
இலக்குவனை; வாழ்த்தினார் - வாழ்த்தினார்கள்; ஏத்தினார் -
புகழ்ந்தார்கள்; வழுத்தினார் - துதித்தார்கள்; ‘காத்து நல்குமின்
தெய்வதங்காள்!’ - காப்பாற்றிக் கொடுங்கள் தெய்வங்களே;’ என்றார்-.
மூவரையும் வாழ்த்தினர் என இயைக்க - தெய்வங்களை வழுத்தினார்
என இயைக்க. தானாக முன்வந்து வனம் செல்லும் இளையோனை
வழுத்தினர் அல்லது ஏத்தினர் எனல் சிறப்பு. 233
