நகர் நீங்கு படலம் - 1927
இராமன் தாயருக்குக் கூறல்
இராமன் தாயரை வணங்கி மன்னனை ஆற்றக் கூறல்
1927.
தாதை வாயில் குறுகினன் சார்தலும்,
கோதை வில்லவன் தாயரைக் கும்பிடா,
‘ஆதி மன்னனை ஆற்றுமின் நீர்’ என்றான்;
மாதராரும் விழுந்து மயங்கினார்.
கோதை வில்லவன் - மாலை அணிந்த வில்லை உடைய இராமன்;
தாதை -தந்தையது; வாயில் - மாளிகை வாயிலை; குறுகினன் சார்தலும்-
அணுகிச்சேர்ந்தவுடன்; தாயரைக் கும்பிடா - உடன்வந்த தாய்மார்களை
வணங்கி; ‘ஆதி மன்னனை - சக்கரவர்த்தியை; நீர் ஆற்றுமின் -
நீங்கள் இங்கேயிருந்து தேற்றுங்கள்;’ என்றான் -; மாதராரும் - அம்
மகளிரும்; விழுந்து மயங்கினார் -தரையில் விழுந்து மயங்கினார்கள்.
‘ஆதி மன்னன்’ சக்கரவர்த்தி தயரதன் - மூத்த முதல் அரசன்
ஆதலின். ‘ஆதி அரசன்’(1708) என்பது காண்க. தயரதனைக் காணாமலே
கானகம்செல்வதாக வான்மீகம் சொல்லவில்லை; இதுகம்பர் மாற்றம். 232
