நகர் நீங்கு படலம் - 1925
மூவரும் போம் முறை
1925.
சீரை சுற்றித் திருமகள் பின் செல,
மூரி விற் கை இளையவன் முன் செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ?
திருமகள் - சீதை; சீரை சுற்றி - மரவுரி அணிந்து; பின்செல -
பின்னால் வர; மூரி விற்கை - வலிய வில் ஏந்திய கையை உடைய;
இளையவன் -இலக்குவன் முன்னே செல்ல; காரை ஒத்தவன் - கார்
மேக வண்ணனாய இராமன்; போம்படி - போகும் தன்மையை; கண்ட -
பார்த்த; அவ் ஊரை - அந்தநகரத்தவரை; உற்றதை - அடைந்த
துன்பத்தை; உணர்த்தவும் ஒன்ணுமோ? -எடுத்துக் கூறவும் இயலுமோ
(இயலாது என்றபடி).
சீதை முன்செல, இளையவன் பின்செல என்று ஒரு பாடமும் உண்டு.
மனைவி முன்போகப் போதலேபெண்டிரைக் காத்துச் செல்வார்க் குரிய
தாகலின் அப்பாடமே கொள்வாரும் உளர். 230
