நகர் நீங்கு படலம் - 1920
கவிக் கூற்று (1920-1921)
சீதையைக் கண்டோர் வருத்தம்
1920.
ஏழைதன் செயல் கண்டவர் யாவரும்
வீழும் மண்ணிடை வீழ்ந்தனர்; வீந்திலர்;
வாழும் நாள் உள என்றபின் மாள்வரோ? -
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே!
ஏழை தன் செயல் - சீதையின் மரவுரி உடுத்த செயலைக்;
கண்டவர் யாவரும் -பார்த்த எல்லோரும்; வீழும் மண்ணிடை
வீழ்ந்தனர் - இறத்தற்கு இடமான நிலத்தில்விழுந்தார்கள்; வீந்திலர் -
இறக்கவில்லை; வாழும் நாள் உள என்றபின் -ஆயுள் நாள் இன்னும்
இருக்குமானால் அவர்கள்; மாள்வரோ? - இறப்பார்களோ; ஊழி
பேர்கினும் - பிரளயமே நேரிட்டாலும்; உய்குநர் உய்வர் - பிழைக்கும்
விதி உள்ளவர் பிழைப்பர்.
மிக்க சோகமும் உயிர்த்துடிப்பும் நிகழ்ந்தது கண்டவர் வீழ்ந்து
இறக்காமைக்குக்காரணம் அவர்களுக்கு ஆயுள் உள்ளமையே அன்றி
வேறன்று என்றார். வேற்றுப்பொருள் வைப்பணி. ‘ஏ’காரம் ஈற்றசை. 225
