நகர் நீங்கு படலம் - 1906
1906.
‘திக்கு நோக்கிய தீவினைப்
பயன்’ எனச் சிந்தை
நெக்கு நோக்குவோர், ‘நல்வினைப்
பயன்’ என நேர்வோர்,
பக்கம் நோக்கல் என்?
பருவரல் இன்பம் என்று இரண்டும்
ஒக்க நோக்கிய யோகரும்,
அருந் துயர் உழந்தார்.
பருவரல் இன்பம் என்று இரண்டும் - துன்பம், இன்பம் என்ற
இரண்டையும்; ஒக்க நோக்கிய யோகரும் - சமமாகப் பார்க்கின்ற ஞான
யோகிகளும்; அருந்துயர்உழந்தார் - அரிய துன்பத்தில் வருந்தினார்
(என்றால்); ‘திக்கு நோக்கிய தீவினைப்பயன்’ எனச் சிந்தை நெக்கு
நோக்குவோர் - தம் இடத்தை நோக்கி வந்த தீவினையின்பயன் இது
என்று மனம் உடைந்து துன்புற்றுப் பார்ப்பவர்; ‘நல்வினைப் பயன்’ என
நேர்வோர் - இது நல்வினையால் விளைந்த பயனாகும் என்று உடன்பட்டு
மகிழ்வோராகிய; பக்கம் நோக்கல் என் உலக மக்களிடத்து - ஆராய்ந்து
கூற என்ன உள்ளது?
தீவினையில் துவண்டு நல்வினையில் மகிழும் உலகினர் பற்றிச்
சொல்ல என்ன உள்ளது?என்றார். ஏனெனின் சமநிலை உடைய ஞானிகளே
துயர் வடித்தனர் ஆகலின். 1762, 1763 ஆம்பாடல்களில் வசிட்டன் உணர்வு
குறித்தமை இங்கு ஒப்பிட்டுணரத் தக்கது. 211
