நகர் நீங்கு படலம் - 1708
இராமன் கோசலையைத் தேற்றுதல் (1708-1711)
1708.
இத் திறத்தின் இடர் உறுவாள்தனைக்
கைத்தலத்தின் எடுத்து, ‘அருங் கற்பினோய்
பொய்த் திறத்தினன் ஆக்குதியோ? - புகல் -
மெய்த் திறத்து நம் வேந்தனை, நீ?’ என்றான்.
(இராமன்) இத்திறத்தின் இடர் உறுவாள்தனை - இவ்வாறு
சொல்லிப் புலம்பித்துன்பம் அடைகின்றவளாகிய கோசலைத் தாயை;
கைத்தலத்தின் - கைகளால் தூக்கி; ‘அருங்கற்பினோய்! - பெண்
டிர்க்கு அரியகற்பினை உடையவளே; மெய்த்திறத்துத நம் வேந்தனை-
உண்மைக் கூற்றில்ஒரு சிறிதும் பிறழாத நம் சக்கரவர்த்தியை; நீபொய்த்
திறத்தினன் ஆக்குதியோ? புகல்’ - சொன்ன சொல்லை மாற்றிக்
கொள்ளும் பொய்த்தன்மை உடையவனாக நீசெய்துவிடுவாயோ,
சொல்வாயாக; என்றான் -.
சொன்னதைச் சொன்னவாறே நிறைவேற்றல் சத்தியமாம். ‘வனம்போகு’
என்ற பின்னர் வனம்போகாமல் இருந்தால் அரசன் சத்தியம் பாழாகும்
என்பதைத் தாய்க்கு நினைவுறுத்தி, நாயகனைச்சத்தியத்தில் காப்பது
நாயகியின் கற்புநலம் என்பதைக் குறிப்பால் புலப்படுத்தி‘அருங்கற்பினோய்’
என்று தாயை விளித்தானாம். 14
