நகர் நீங்கு படலம் - 1701
இராமன் தந்தை பணி இதுவெனல்
1701.
“ஈண்டு உரைத்த பணி என்னை” என்றவட்கு.
‘ “ஆண்டு ஓர் ஏழினொடு ஏழ், அகன் கானிடை,
மாண்ட மா தவத்தோருடன் வைகி, பின்,
மீண்டு நீ வரல் வேண்டும்” என்றான்’ என்றான்.
‘ஈண்டு - இவ்விடத்தில்; உரைத்த - (சக்கரவர்த்தி உனக்குச்)
சொல்லிய; பணி என்னை’ - கட்டளை யாது; என்றவட்கு - என்று
கேட்டகோசலைக்கு; ஓர் ஏழினோடு ஏழ் ஆண்டு - ஒரு பதினான்கு
ஆண்டுக் காலம்; அகன்கானிடை - அகன்ற காட்டிடத்தில்; மாண்ட -
மாட்சிமை பொருந்திய; மாதவத்தோருடன் - முனிவர்களுடன்; வைகி -
தங்கி; பின் - பிறகு; நீ மீண்டு வரல் வேண்டும் - நீ திரும்பி வருதல்
வேண்டும்; என்றாள்’ - என்று கூறினான்; என்றான் -.
கோசலை வருந்தாதிருக்கக் ‘காட்டிற்கு அனுப்பி விட்டான்’என்று
கூறாமல், முனிவர்களுடன் தங்கித் திரும்பிவருதல் வேண்டும் என்று நாயகன்
பணித்தான்என்ற இராமன் சொல்திறம் போற்றுதற்குரியது. ஈண்டு -
முன்னிலையிடத்தின் கண் வந்தது. 7
