நகரப் படலம் - 96
அயோத்தி அமராவதியினும்
அளகையினும் விஞ்சியது
படைப்பிலேயே தனிநிலை
96.
அயில் முகக் குலிசத்து அமரர்கோன் நகரும்,
அளகையும் என்று இவை, அயனார்
பயிலுறவு உற்றபடி, பெரும்பான்மை
இப் பெருந் திரு நகர் படைப்பான்;
மயன் முதல் தெய்வத் தச்சரும் தம்தம்
மனத் தொழில் நாணினர் மறந்தார்,
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து
இந் நகர் புகலுமாறு எவனோ?
அயில் முக குலிசத்து அமரர் கோன் நகரும்- கூர்மையான
முகத்தை உடைய வச்சிரப்படை கொண்ட தேவேந்திரனது அமராவதி
நகரும்; அளகையும் என்று இவை- குபேரனது நகரமான அளகாபுரியும்
ஆகிய இரு நகரங்களையும்; அயனார் பயிலுறவு உற்றபடி - பிரமன்
(படைத்தது) பயிற்சி பெறும்படியாகும்; பெரும்பான்மை இப்பெருந்
திருநகர் படைப்பான்- மிகச் சிறப்புடைய இந்தப் பெருநகரைப்
படைப்பதற்கு; மயன்முதல் தெய்வத்தச்சரும்- மயன் முதலான தேவ
உலகச் சிற்பிகளும்; தம்தம் மனத் தொழில் மறந்தார்- தமது நினைப்பு
மாத்திரத்தில் படைக்கும் தொழிலை மறந்துவிட்டவர்களாக, நாணினர்-
(அயோத்தியை ஒத்த நகரைப் படைக்க இயலாமைக்கு) வெட்கமுற்று
நிற்பர்; புயல்தொடு குடுமி நெடுநிலை மாடத்து- மேகங்களை
தொடுமளவு நீண்ட மேல் நிலைகளை கொண்ட மாடங்களை உடைய;
இந்நகர் புகலும் ஆறு எவன்- இந்த அயோத்தி மாளிகைகளின்
சிறப்பைச் சொல்வது எவ்வாறு?
பிரமன் அயோத்தியை படைப்பதற்கு முன்பு, அமராவதி
அளகாபுரியாகிய நகரங்களைப் படைத்தது முழுத் தேர்ச்சி பெற்ற
பிறகே இந் நகரைப் படைக்க வேண்டுமெனக் கருதியதே காரணமாகும்
என்றது தற்குறிப்பேற்ற அணியாகும்.
‘புயல் தொடு குடுமி’ என்றது உயர்வு நவிற்சி அணியாகும்
பயிலுறவு உற்ற படி: பயிற்சி செய்தவாறு. குடுமி: சிகரம். மறந்தனர்
முற்றெச்சம். 4
