நகரப் படலம் - 93

bookmark

அயோத்தியின் பெருமை (93-99)

எழுசீர் விருத்தம்
 
அயோத்தியின் அழகு
 
93.

செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின்
   சீரிய கூரிய தீம் சொல்.
வவ்விய கவிஞர் அனைவரும், வடநூல்
   முனிவரும், புகழ்ந்தது; வரம்பு இல்
எவ் உலகத்தோர் யாவரும், தவம் செய்து
   ஏறுவான் ஆதரிக்கின்ற
அவ் உலகத்தோர், இழிவதற்கு அருத்தி
   புரிகின்றது - அயோத்தி மா நகரம்.
 
செவ்விய  -    செம்மையானவையும்; மதுரம் சேர்ந்த -  இனிமை
பொருந்தியவையும்;  நல் பொருளின் சீரிய - கூறும் நல்ல பொருளால்
சிறந்தவையும்; கூரிய - நுட்பமானவையும் ஆகிய; தீம்சொல் - இனிய
சொற்களை;  வவ்விய  -  கவர்ந்து கொண்ட; கவிஞர் அனைவரும் -
(தமிழ்)    கவிஞர்களாலும்-    யாவராலும்;   வடநூல்   முனிவரும்-
வடமொழியில் வல்ல  வான்மீகி  முதலான  முனிவர்கள்;  புகழ்ந்தது -
புகழப்பட்டது       (அயோத்தி  நகரம்); மேலும்; வரம்பு இல்   எவ்
உலகத்தோர்  யாவரும்-   அளவற்ற   உலகங்கள்    எல்லாவற்றிலும்
வாழ்கின்றவர்கள் எல்லோரும்; தவம் செய்து ஏறுவான் -  தவங்களைச்
செய்து   அடைவதற்கு;   ஆதரிக்கின்ற   -   விரும்புகின்ற;    அவ்
உலகத்தோர்   -  அந்தப்  பரமபதமாகிய  வீட்டு   உலகத்தவர்களும்;
இழிவதற்கு - பிறப்பதற்கு; அருத்தி புரிகின்றது - (தகுந்த நகரம்) இது
என்னும்    விருப்பத்திற்கு    உரியது;   அயோத்தி   மாநகரம்   -
அயோத்தியாகிய பெருமைக்குரிய நகரமேயாகும்.

இராம   கதையைப் பாடிய தமிழ்ப் புலவர்களும் வான்மீகி  முதலான
வடநூல்   முனிவர்களும்  புகழ்ந்தது  அயோத்தி  நகரையே.    எல்லா
உலகங்களிலும் வாழ்வோர் யாவரும் அருந்தவம் செய்து முடிவாக   வீடு
பேறு பெறவே விரும்புவர்; அவர்களும் அங்கே சென்றபிறகு   அதனை
விடவும்  பெருமை  மிக்கது. அயோத்தியே என்று உணர்ந்து,   அங்கே
அவதாரம் செய்ய விரும்புவர். அந்த அளவுக்குப் பெருமை    உடையது
அயோத்தி நகரம்- இது செய்யுளின் திரண்ட கருத்து.

‘கவிஞர்’  என்றது “இராமாயணம் பாடிய சங்கப் புலவர் முதலியோர்”
என்பது    ஐயரவர்கள்    குறிப்புரை.    (ஐயரவர்கள்     நூலகத்தின்
கம்பராமாயணப் பதிப்பு - பாலகாண்டம் - பக். 45). சங்க   காலத்து ஓர்
இராமாயணம்  வழங்கியதைத்  தொல்காப்பிய  உரை   முதலியவற்றால்
உணரமுடிகிறது.  அதனை பாடியவர்களை நினைந்து கம்பர்   கூறியதாக
ஐயரவர்கள்    குறிப்பிடுகிறார்கள்    வடநூல்    முனிவர்     என்றது
இராமாயணத்தை    வடமொழியில்   பாடிய   வான்மீகி,     வசிட்டர்,
போதாயனர் முதலியோரை                                 (10)

புகழ்ந்தது    புரிகின்றது..... அயோத்தி என வினைமுற்று இரண்டாய்,
அயோத்தி  என்ற  பெயர் கொண்டு   முடிந்தது. யாவரும்: முற்றும்மை.
அவ்வுலகத்தோர் என்பதில் தொக்க    உம்மை உயர்வு சிறப்பும்மையாம்.
இழிவதற்கு:  இறங்குவதற்கு  இங்கே    மேனிலையிலிருந்து கீழ் இறங்கி
வருதல்  என்னும்  பொருளுடைய    ‘அவதாரம்’ என்ற வடசொல்லுக்கு
நேர்.                                                      1