நகரப் படலம் - 155

bookmark

தோரணம் தரெு புரவிப்பந்தி இவற்றின் சிறப்பு

155.

இரவியின் சுடர் மணி இமைக்கும். தோரணம்;
தெருவினின் சிறியன. திசைகள்; சேண் விளங்கு
அருவியின் பெரியன. ஆனைத் தானங்கள்;
பரவையின் பெரியன. புரவிப் பந்தியே.
 

தோரணம் இரவியின் சுடர்மணி இமைக்கும் -  அந்த  நகரத்துத்
தோரணங்கள்   சூரியன்  போன்ற  சுடர்மிகு  மணிகளால்    ஒளிரும்;
திசைகள் தெருவினின் சிறியன - நெடிய  வீதிகளைவிடத்   திசைகள்
சிறியனவாம்; சேண்விளக்கு   அருவியின்   பெரியன    ஆனைத்
தானங்கள்- மலையின்  மிக  உயர்ந்தே  இருக்கும்   அருவியை  விட
யானையின்  மதநீர்  பெரியதாகும்;  பரவையின் பெரியன    புரவிப்
பந்தி -கடல்களை விடவும் பெரியது. அந்நகரத்தில் குதிரைகள்  கட்டும்
இடம்.

திசைகள் தெருவினில் சிறியன என்றது உயர்வு நவிற்சியின்  எல்லை.

தானம்:  மதநீர்;  பந்தி:  குதிரை கட்டும்  லாயம்;   சேண்: உயரம்;
சுடர்மணி வினைத்தொகை.                                  63