நகரப் படலம் - 152

bookmark

மைந்தர் கூட்டத்தின் நிகழ்ச்சிகள் இவை எனல்

152.

அதிர் கழல் ஒலிப்பன; அயில் இமைப்பன;
கதிர் மணி அணி வெயில் கால்வ; மான்மதம்
முதிர்வு உறக் கமழ்வன; முத்தம் மின்னுவ;
மதுகரம் இசைப்பன; - மைந்தர் ஈட்டமோ
 
அதிர்கழல்   ஒலிப்பன -  அந்நகரத்திலே   அதிர்கின்ற   வீரக்
கழல்களின்  ஒலி  ஆர்ப்பரித்து ஒலிப்பனவாக; அயில்   இமைப்பன-
வேல்  முதலிய  படைக்கலங்கள்  ஒளிர்வனவாக;   கதிர்மணி  அணி
வெயில்  கால்வ- ஒளிமிக்க  மணிகளாலான  அணிகலன்கள்   எங்கும்
ஒளிவீசுபவையாக; மான்மதம்  முதிர்வு  உறக் கமழ்வன-    கத்தூரி
மிகுதியும் கமழ்வதாக; முத்தம் மின்னுவ-  அணிகலன்களில்  அமைந்த
முத்துக்கள்   மின்னல்   போல  ஒளிர்வன;   மதுகரம்   இசைப்பன-
வண்டுகள்   பண்  பாடுவனவாக; மைந்தர்  ஈட்டமே-   (இவ்வாறாக)
ஆடவர் கூட்டம் விளங்கியது.

மைந்தர்    ஈட்டம் கழல் ஒலிக்க. அயில்  இமைக்க.  வெயில் கால.
கமழ்வனவாக.  முத்தம்மின்ன.  மதுகரம்  இசைக்க   இழுத்தன  எனக்
கொண்டு கூட்டி முடிக்க.

மதுகரம்:  தேனைச் சேகரிக்கும் வண்டுகள்;  முத்தம்:  முத்து மாலை
முதலிய  அணிகள்;  மான்  மதம்: கத்தூரி  மானிடமிருந்து  கிடைக்கும்
மணப்பொருள்.                                            60