நகரப் படலம் - 149
மாலை மணிகளைக் கழுவுதல்
149.
இளைப்ப அருங் குரங்களால், இவுளி, பாரினைக்
கிளைப்பன; அவ் வழி, கிளர்ந்த தூளியின்
ஒளிப்பன மணி; அவை ஒளிர, மீது தேன்
துளிப்பன, குமரர்தம் தோளின் மாலையயே.
இவுளி இளைப்ப அரும் குரங்களால்- குதிரைகள் வீதியிலே
ஓடும்பொழுது தமது குளம்புகளால்; பாரினைக் கிளைப்பன-
நிலைத்தைக் கிளறுகின்றன; அவ்வழி கிளர்ந்த தூளியின்- அங்குக்
கிளர்ந்து மேலெழுந்த புழுதியினாலே; மணி ஒளிப்பன- (அக்
குதிரைகளின் மீது ஏறிவரும் வீரர்கள் அணிந்த) மணிகள் மறைவன
ஆயின; அவை ஒளிர -அம் மணிகள் மறுபடியும் ஒளிவீசுமாறு; மீது
குமரர்தம் தோளின் மாலை தேன் துளிப்பன- அவற்றின் மேலே
வீரர்கள் தோள்களில் அணிந்த மாலைகள் தேன் துளிகளைச்
சொரிந்தன.
குதிரைச் சவாரி செய்யும் வீரர்கள் அணிந்த அணிகலன்களில்
பதிந்த மணிகள் அக்குதிரைகளின் குளம்புகள் கிளறிய புழுதியில்
மறைய அவை ஒளிரும்படி மாலைகள் தேன்பொழியும் என்பது
கருத்து. 57
