நகரப் படலம் - 141

bookmark

ஆடவர் தோள்கள் அரிவையர்
தாளால் உதைபட்டுச் சிவத்தல்

மகளிர் மேனி
 
141.

குதை வரிச் சிலைநுதல் கொவ்வை வாய்ச்சியர்
பதயுகத் தொழில்கொடு, பழிப்பு இலாதன
ததை மலர்த் தாமரை அன்ன தாளினால்,
உதைபடச் சிவப்பன, உரவுத் தோள்களே.
 
குதை  வரிச்சிலை நுதல்- நாண் பூட்டிய வரியமைந்த வில் போன்ற
நெற்றியையும்;  கொவ்வை  வாய்ச்சியர்-  கோவைப்  பழம்  போன்ற
வாயையும் உடைய  பெண்களின்;  பதயுகத்  தொழில்கொடு- இரண்டு
பாதங்களுக்கும்    (செம்பஞ்சு  ஊட்டுதலாகிய)  தொழிலைக்  கொண்டு;
பழிப்புஇலாதன-   பிறரால்  பழித்துக்  கூற  இயலாதனவாகிய;  ததை
மலர்த்தாமரை  அன்னதாளினால்-  நெருங்கிய  இதழ்களை  உடைய
தாமரை  போன்ற   பாதங்களால்;  உதைபட-  (ஊடல்கொண்டு) உதை
பட்டதனாலே; உறவுத் தோள்கள் சிவப்பன- ஆண்களின் வலிமைமிக்க
தோள்கள் சிவந்து காணப்படும்.

ஊடலால் தலைவி,  தலைவனைக் காலால் உதைப்பதுண்டு. அதனால்
அத்தலைவனது வலிய தோள்கள் சிவந்தன என்கிறார்.

குதை:     வில்நாண். வரி: கட்டு. குதை, வரி சிலை என்று வில்லைச்
சிறப்பிக்கிறார்.    சிலை  நுதல்: சிலை போன்ற நுதல் உவமைத்தொகை.
பத   யுகம்:     இரண்டு  பாதங்கள்  இது  முதல்  மூன்று  பாடல்கள்
அந்நகரத்தில் வாழும் மகளிரின் மேனி அழகைக் கூறுவனவாம்.     49