நகரப் படலம் - 140

bookmark

பாடலால் பறவைகளும் பரவசமாதல்

140.

இறங்குவ மகர யாழ் எடுத்து இன் இசை
நிறங் கிளர் பாடலான் நிமிர்வ; அவ் வழி
கறங்குவ வள் விசி கருவி; கண் முகிழ்த்து
உறங்குவ, மகளிரோடு ஓதும் கிள்ளையே.
 
மகர     யாழ்   -  மகர  யாழிலே  எடுத்த  (விரலாலே  நெருடி
கவர்ந்தெடுக்கப்பட்ட);  இன்  இசை-  இனிய  இசையொலிகள்;  நிறங்
கிளர்-     உள்ளக்    கிளர்ச்சி    தரும்    பாடல்கள்   காரணமாக
வாய்ப்பாட்டோடு;  இறங்கவே- யாழ் இசை நலிந்தொலிப்பன; நிமிர்வ-
எடுத்தொலிப்பன;  அவ்வழி- அந்த முறையில்; வள் விசி கருவி- வார்
கட்டிய   கருவியாகிய முழவுகள்; கறங்குவ- ஒலிப்பன (அந்த இசையைக்
கேட்டு); மகளிரோடு-  பெண்களோடு;  ஓதும்  கிள்ளைகள்-  பேசும்
கிளிகள்;   கண்முகிழ்த்து   உறங்குவ-   கண்ணை  மூடிக்  கொண்டு
உறங்குவனவாம்.

மகரயாழ்     பத்தொன்பது   நரம்புகள் கொண்டது. இறங்குவனவும்
நிமிர்வனவுமாகிய   இசையோட்டங்களை     முறையே  அவரோகணம்,
ஆரோகணம்     என்பர்.     யாழிசைக்கு      ஏற்ப    முடிவுகளும்
முழங்குவனவாம்.  இசை நயத்தில் ஈடுபட்டுக்   கிளிகள் உறங்குகின்றன.
வள்: தோல், விசி கருவி: வினைத்தொகை.                      48