நகரப் படலம் - 139
சோலை தேன் பொழிய மகளிர் வருந்துதல்
139.
பொழிவன சோலைகள் புதிய தேன் சில;
விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென
நுழைவன; அன்னவை நுழைய, நோவொடு
குழைவன, பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையோ.
பொழிவன சோலைகள் புதிய தேன் சில- சில சோலைகள் புத்தம்
புதிய தேனைச் சொரிவன; விழைவன தென்றலும் மிஞிறும்
மெல்லென நுழைவன- அத்தேனை விரும்பி தென்றலும் வண்டும்
மெல்ல அச் சோலைகளில் நுழைவனவாம்; அன்னவை நுழைய-
அவை அவ்வாறு நுழைய; பிரிந்தவர் கொதிக்குக் கொங்கை-
தலைவனைப் பிரிந்த மகளிரின் (காமத்தால்) கொதிக்கும் தனங்கள்;
நோவொடு குழைவன- வருத்தத்துடன் மெலிவனவாயின.
சோலைகள் அன்றலர்ந்த மலரின் மதுவைப் பொழிகின்றன. அந்தத்
தேனை விரும்பித் தென்றலும் வண்டும் மெல்ல அச்சோலையினுள்
நுழைகின்றன. தென்றலும் வண்டும் பிரிந்தவருக்குத் துன்பம்
விளைவிப்பன என்பதால் தலைவனைப் பிரிந்த தலைவி, காம
நோயால் வருந்த, தனங்கள் வருந்தி மெலிந்தனவாம். 47
