நகரப் படலம் - 133
சூரியன் ஒளி அயோத்தியின் ஒளியே எனல்
133.
எழும் இடத்து அகன்று, இடை ஒன்றி, எல் படு
பொழுதிடைப் போதலின், புரிசைப் பொன் நகர்,
அழல் மணி திருத்திய அயோத்தியாளுடைய
நிழல் எனப் பொலியுமால்- நேமி வான் சுடர்.
நேமி வான்சுடர் - வட்ட வடிவமாக வானில் ஒளிரும் சூரியன்;
எழும் இடத்து அகன்று- உதிக்கின்ற காலத்திலே கிரணங்கள்
விரிந்தும்; இடை ஒன்றி- நடுப்பகலில் மிக்கும்; எல்படுபொழுது இடை
போதலின்- மாலையில் மறையும் காலத்திலே மீண்டும் கிரணங்கள்
மறைந்தும் போவது; அழல் மணி திருத்திய- தீயைப் போல
ஒளிரும் செந்நிறமான மாணிக்கங்களை ஒழுங்காக அமைத்த;
புரிசைப் பொன் நகர்- வட்டமான பொன்னால் அமைந்த மதில்
உடைய அந்த நகரம்; அயோத்தியாள் உடை- அயோத்தியாகிய
பெண்ணினது; நிழல் எனப் பொலியும்- நிழலைப் போலக் கதிரவன்
விளங்கும்.
கதிரவனுக்கு இயல்பான ஒளி இருக்குமாயின் உதய காலத்திலேயே
ஒளியோடு விளங்க வேண்டும். அவ்வாறு இல்லை. மாலை நேரத்திலும்
கதிரவனுக்கு ஒளி இல்லை எனவே அயோத்தி நகரத்தின் ஒளியைக்
கொண்டே சூரியன் ஒளிர்கிறது. இது இச் செய்யுளின் கற்பனை. இது
தற்குறிப்பேற்றவணி. 41
