நகரப் படலம் - 132

bookmark

அயோத்தியின் ஒளிபெற்று தேவருலகு
பொன்னுலகாயிற்று எனல்

132.

மின் என, விளக்கு என, வெயிற் பிழம்பு என,
துன்னிய தமனியத் தொழில் தழைத்த அக்
கன்னி நல் நகர் நிழல் கதுவலால் அரோ,
பொன்னுலகு ஆயது, அப் புலவர் வானமே!
 
துன்னிய  தமனியத்   தொழில்  தழைத்த- உயர்ந்த பொன்னால்
தொழில்  திறம்  அமைய  கட்டப்பட்ட;  அக்கன்னி  நல்நகர்- அந்த
அழிவில்லாத  மா  நகரின்;  மின்என  விளக்கு  என-   மின்னலைப்
போலவும்,  விளக்கின்  ஒளியினைப் போலவும்; வெயில் பிழம்பு என-
சூரியக்  கதிர்களைப்  போலவும்  உள்ள; நிழல் கதுவலால்- ஒளி தன்
மீது  படுவதனால்; அப்புலவர் வானம் பொன் உலகு ஆயது- அந்தத்
தேவருலகு பொன் உலகாயிற்று.

அமரர்     உலகம்    பொன்னுலகமாய்   பொலிவதற்குக் காரணம்
அயோத்தி  மாநகர்  பொன்னால்  அமைந்து,    தீப  ஒளி, சூரியனின்
கதிர்கள்  ஆகியவை  போல  ஒளிர்வதால்   அப்பேரொளியால்  தேவ
உலகு பொன்னுலகாயிற்று என்றதால் ஏதுத்தற்  குறிப்பேற்றவணி. அரோ
ஏ : அசைகள்.                                            40