நகரப் படலம் - 123

bookmark

123.

பாடகக் கால்அடி பதுமத்து ஒப்பன,
சேடரைத் தழீஇயின, செய்ய வாயின,
நாடகத் தொழிலின, நடுவு துய்யன,
ஆடகத் தோற்றத்த, அளவு இலாதன.
 
பாடகக்     காலடி- வேலைப்பாடமைந்த தூண்களின் அடிப்பக்கம்;
பதுமத்து   ஒப்பன-   தாமரை  மலர்  வடிவத்தில்   அமைந்தனவும்;
சேடரைத்   தழீஇயின-   கடைக்கால்   ஆழத்தால்   நாக   உலகை
தழுவியுள்ளனவும்;  செய்ய  ஆயின- வேலைப்   பாட்டினால் செம்மை
உடையனவும்;  நாடு  அகம்  தொழிலின- யாவரும் விரும்பிக் காணும்
தொழில்  திறம்  உடையனவும்;  நடுவு  துய்யன-  நடுவிட  மெல்லாம்
தூய்மை உடையனவும்; ஆடகத்  தோற்றத்து-  பொன்னைப்  போன்ற
தோற்றமுடையனவும்;    அளவு   இலாதன-   ஆகிய   மாளிகைகள்
அளவற்றனவாம்.

நாடு     அகத்  தொழிலின:  கருதிச்  செய்யப்படும் தொழில் திறம்
உடையன   என்றும்   பொருந்தும்.     இப்பாடல்  விலைமகளிரையும்
குறிக்கும்    வகையில் சிலேடையாக அமைந்துள்ளது. பாடகம் அணிந்த
மகளிரின்  பாதங்கள்  தாமரை  மலரை ஒப்பன; இளையரை   (சேடர்).
அணைத்  திருப்பவர்;  சிவந்த  வாய்  உடையவர்;  நடனத்   தொழில்
அறிந்தவர்;  இடுப்பு  (நடுவு); பஞ்சின் (தூய்) நுனியை ஒத்தது-   என்று
தக்கவாறு பொருள்கொள்ள வேண்டும்.

   பாடகம்- கால் அணி; பாடு அகம்- வேலைப்பாடு மிகுந்த.

ஒப்பன,   தழீஇயின,   வாயின,  தொழிலின்,  துய்யன,  தோற்றத்த-
முற்றெச்செங்கள்.

   தழீஇ- தழுவி (சொல்லிசை அளபெடை).                      31