நகரப் படலம் - 119
மாளிகைகளின் அமைதி (119-123)
மாளிகைகள்
கலிவிருத்தம்
119.
‘திங்களும் கரிது’ என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதையுடைத் தவள மாளிகை-
வெங் கடுங் கால் பொர, மேக்கு நோக்கிய,
பொங்கு இரும் பாற்கடல்- தரங்கம் போலுமே.
திங்களும் கரிது என- சந்திரனும் கருமை நிறத்து என்று
கூறுமளவுக்கு; வெண்மை தீற்றிய- வெண்மை நிறம் பொருந்தப் பூசிய;
சங்க வெண் சுதை உடை - சங்கிலிருந்து செய்த வெண்ணிறச்
சுண்ணாம்புச் சாந்தால் அமைந்த; தவள மாளிகை - வெள்ளை
மாளிகைகள்; வெங்கடுங் கால் பொர- கடுமையான பெருங்காற்று
வீசுவதால்; மேக்கு நோக்கிய- மேல் நோக்கி எழுந்து; பொங்கு
இரும்பாற்கடல்- பொங்கும் பெரிய பாற்கடலின்; தரங்கம் போலுமே-
அலைகளைப் போலக் காணப்படும்.
வானோங்கி உயர்ந்து விளங்கும் வெண்ணிற மாளிகைகள் கடும்
காற்று வீசுவதால் மேலெழுந்து பாற்கடலின் அலைகளை ஒக்கும்
என்றதால் நிறம் உயர்ச்சி இவை பற்றி வந்த தன்மைத்
தற்குறிப்பேற்றவணியாகும். சுதை: சாந்து. தீற்றிய: பூசிய. தவளம்:
வெண்மை. மேக்கு: மேலே. கால்பொர: காற்று மோத. 27
