நகரப் படலம் - 115

bookmark

கோபுர அமைப்பும் சிற்பச் சிறப்பும் (115-118)

115.

தா இல் பொன் - தலத்தின், நல்
   தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயர்த்த கற்பகப் பொதும்பர்
   புக்கு ஒதுங்குமால்-
ஆவி ஒத்த அன்பு சேவல்
   கூவ வந்து அணைந்திடா
ஓவியப் புறாவின் மாடு
   இருக்க ஊடு பேடையே.
 
ஆவி     ஒத்து சேவல் கூவ- தனது உயிருக் கொப்பான  ஆண்
புறாவானது  கூவி  அழைக்கவும்;  அன்பின்  வந்து அணைந்திடாது-
அன்புடன்  வந்து  தழுவிக்  கொள்ளாமல்;  ஓவியப்  புறாவின் மாடு
இருக்க-  அந்த வாயிலின் புறத்தே சித்திரத்தில் அமைந்துள்ள   பெண்
புறாவின்   பக்கம்   (ஆண்  புறாஉடன்);  இருந்ததால்  ஊடுபேடை-
ஊடல்கொண்ட  பெண்புறா;  தாஇல் பொன்தலத்தில்- குற்றமற்ற தேவ
உலகிலே;  நல்தவத்தினோர்கள் தங்கு-  நல்ல  தவம்  செய்தவர்கள்
தங்கியுள்ள;   தாள்   பூவுயிர்த்த-   தாளை   உடையதும்  மலர்கள்
பூத்திருப்பதுமான; கற்பகப்  பொதும்பர்  புக்கு ஒதுங்குமால்- கற்பகச்
சோலையிலே சென்று மறைந்திருக்கும்.

கோபுர     வாயிலில் வாடும்  ஆண்புறா, ஓவியப் புறாவை உண்மை
என  நினைத்து  அதன்  அருகிருக்கும்  அதனைக்     கண்டு  ஊடிய
பெண்புறா    விண்ணுலகத்தின்    கற்பகச்   சோலையிலே     புகுந்து
மறைந்திருக்கும்.  இது  மயக்கவணி. கற்பகம்: நினைத்ததைத்    தருவது.
சந்தானம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம், அரிசந்தனம் என்ற    ஐவகை
மரங்கள்  நிறைந்திருப்பது இச்சோலை என்பர். தாவில்:   குற்றமில்லாத.
தாள்: அடி நாளமும் ஆம்.                                   23