நகரப் படலம் - 112
அகழியின் கரையமைப்பு
112.
விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி
கட்டி, உள்ளுறப்
பளிங்கு பொன்-தலத்து அகட்டு
அடுத்துறப் படுத்தலின்,
‘தளிந்த கல்-தலத்தொடு, அச்
சலத்தினை, தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்’ என்றல்
தேவராலும் ஆவதே?
விளிம்பு சுற்றும் வெள்ளிக்கட்டி முற்றுவித்து - அந்த அகழியின்
ஓரம் முழுவதும் வெள்ளியினாலே கட்டி முடித்து; உள்ளுறப் பளிங்கு
பொன்தலத்து அகட்டு அடுத்துறப்படுத்தலின் - உள்ளிடமெல்லாம்
பளிங்குக் கற்களைத் தள வரிசையாகப் பதித்திருப்பதாலே; ‘தளிந்த
கல்தலத்தொடு- பளிங்குக் கல்லால் தளவரிசை இடப்பட்ட நிலத்தோடு;
அச்சலத்தினை- அந்த அகழியின் தெளிந்த தண்ணீரை; தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்’ என்றல்- தனியாக வேறு பிரிந்து இது நீர்
இது பளிங்கு என்று தெளிவாகப் பிறர்க்கு உணர்த்துவோம் என்று
சொல்வது; தேவராலும் ஆவதோ-தேவர்களாலும் இயலாததொன்றாகும்.
அகழியின் விளிம்பு வெள்ளி - தளம் பளிங்கு; தெளிந்த நீர்
எனவே நீருக்கும் பளிங்குக் கற்களுக்கும் வேறுபாட்டை அறிவது
தேவர்களாலும் ஆகாதது என்பது கருத்து. இங்கே அகழியின் நீர்
தெளிவாக இருப்பதாகக் குறிப்பவர் முன்னே (106) கலங்கியிருப்பதாகக்
குறித்திருக்கிறார். 20
