நகரப் படலம் - 111

bookmark

அகழி அரசர் சேனையை ஒக்கும் எனல்

111.

ஆளும் அன்னம் வெண் குடைக்
   குலங்களா, அருங் கராக்
கோள் எலாம் உலாவுகின்ற
   குன்றம் அன்ன யானையா,
தாள் உலாவு பங்கயத்
   தரங்கமும் துரங்கமா,
வாளும், வேலும், மீனம் ஆக,
   மன்னர் சேனை மானுமே.
 
ஆளும்   அன்னம் வெண்குடைக் குலங்களா - அங்குத் திரியும்
அன்னங்கள்     வெண்குடைக்    கூட்டங்களாகவும்;    அருங்கராக்
கோளெலாம் உலாவுகின்ற குன்றம்  அன்னயானையா  -  உலாவித்
திரியும்  மலை  போன்ற யானைகளாகவும்;  தாள்  உலாவு  பங்கயத்
தரங்கமும்  துரங்கமா  -  தாளுடன்  அசையும்  தாமரையை உடைய
அலைகளே  குதிரைகளாகவும்;  மீனம்  வாளும் வேலுமா - மீன்களே
வாளும்   வேலுமாகவும்;   மன்னர்   சேனை  மானும்  -  அரசரின்
படைகளை ஒத்திருக்கும்.

அன்னங்களே      வெண்   குடையாகவும், முதலைகள் யானைகள்,
அலைகள்   குதிரகள்   -    மீன்கள்   வாளும்  வேலுமாக  விளங்கி
அகழியானது  மன்னர்  சேனை    போன்றிருந்தது  என்கிறார். உருவக
அணியை அங்கமாக உடைய உவமை அணி.

துரங்கம்- வேகமாகச் செல்வது. எனவே குதிரையாகும்.

   தரங்கம்- அலை.                                        19