நகரப் படலம் - 102

bookmark

மதிலின் உயர்ச்சி

102.

பஞ்சி, வான் மதியை ஊட்டியது அனைய
   படர் உகிர், பங்கயச் செங் கால்,
வஞ்சிபோல் மருங்குல், குரும்பைபோல் கொங்கை
   வாங்கு வேய் வைத்த மென் பணைத் தோள்,
அம் சொலார் பயிலும் அயோத்தி மா நகரின்
   அழகுடைத்து அன்று என அறிவான்,
இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம்
   காணிய எழுந்தது ஒத்துளதே!
 
பஞ்சி, வான்மதியை ஊட்டியது அனைய- செம்பஞ்சுக் குழம்பைப்
பூசி   வெண்மையான சந்திரனை ஒழுங்கு பெற வைத்ததை ஒத்த; படர்
உகிர்-  ஒளி  வீசும்  நகங்களை உடைய; பங்கயச் செங்கால்- தாமரை
போன்ற  சிவந்த  பாதங்களையும்;  வஞ்சி போல் மருங்குல்- வஞ்சிக்
கொடி  போன்ற இடையையும்; குரும்பை போல் கொங்கை- தென்னங்
குரும்பை  போன்ற  தனங்களையும்;  வாங்கு  வேய்  வைத்த மென்
பணைத்  தோள்-  வளைந்த மூங்கில் போன்ற மென்மையான  பருத்த
தோள்களையும்  உடைய;  அம்சொலார் பயிலும்- அழகிய சொற்களை
உடைய    மகளிர்   நிறைந்திருக்கின்ற;    அயோத்தி   மாநகரின்-
அயோத்தியாகிய   சிறந்த  நகரைவிட;  அழகுடைத்து  அன்று  என
அறிவான்-   அழகுடையதோ  அல்லவோ  என்று  அறிவதற்காகவே;
இஞ்சிவான்  ஓங்கி-  அந்நகரத்து  மதில்கள் ஆகாய மளவு உயர்ந்து;
இமையவர் உலகம்  காணிய-  தேவர்கள்  வாழும்  உலகைக்  காண;
எழுந்தது ஒத்து உளது- எழுந்ததை ஒத்து உயர்ந்துள்ளது.

மதில்     வானுற ஓங்கி உயர்ந்துள்ளது. அவ்வாறு உயர்ந்தமைக்குக்
காரணம்    வானுலகத்தைக்    காணுதலே.    அவ்வாறு     காணுதல்
கூடாதெனினும்    அதனைப்    பயனாகக்    கூறினமையால்     இது
தற்குறிப்பேற்றவணி.  ‘அஞ்சொலார்  பயிலும்  அயோத்தி’   என்றதால்
அயோத்தி   மகளிரை  விட  வானுலகத்து  மகளிர்    அழகுடையரோ
அல்லரோ  என்பதனை  அறிய  வேண்டி  மதில்    ஓங்கிற்று என்பது
கருத்தாம்.

காணிய:   காண செய்யிய என்று வாய்பாட்டு வினையெச்சம்.  பஞ்சி:
செம்பஞ்சுக்  குழம்பு.  உகிர்: நகம். வஞ்சி: நீர்வஞ்சிக் கொடி.    இஞ்சி:
மதில். வாங்குவேய்: வளையும் தன்மையுள்ள இள மூங்கில்.          10