தைலம் ஆட்டு படலம் - 2005

bookmark

பரதனை அழைத்துவருமாறு தூதரை அனுப்புதல்

தேவிமாரை அகற்றி அனுப்பி, பரதனுக்கு ஓலை அனுப்புதல்  

2005.    

தேவிமாரை, ‘இவற்கு உரிமை
     செய்யும் நாளில், செந் தீயின்
ஆவி நீத்திர்’ என நீக்கி,
     அரிவைமார்கள் இருவரையும்
தா இல் கோயில்தலை இருத்தி,
     ‘தண் தார்ப் பரதற் கொண்டு அணைக’ என்று
ஏவினான், மன்னவன் ஆணை
     எழுது முடங்கல் கொடுத்து, அவரை,

    தேவிமாரை -அறுதிபதினாயிரம் தேவியரையும்; ‘இவற்கு உரிமை
செய்யும் நாளில் - இவனுக்குஇறுதிக்கடன் செய்யும் நாளில்; செந்தீயின்
ஆவி நீத்திர் - நெருப்பில் உடன்கட்டை ஏறி உயிர்விடுவீராக;’ என
நீக்கி - என்று  போகச்செய்து;  அரிவைமார்கள்இருவரையும் -
பட்டத்தரசியர் இருவரையும்; தாவில் கோயில் தலை இருத்தி -குற்றமற்ற
அரண்மனையில் இருக்குமாறு  செய்து;  மன்னவன் ஆணை எழுதும்
முடங்கல் கொடுத்து அவரை- அரசன் ஆணையை எழுதும் ஓலையைக்
கொடுத்துத் தூதுவரை;  ‘தண்தார்ப் பரதன் கொண்டுஅணைக’ என்று
ஏவினான் - குளிர்ந்த மாலை அணிந்த பரதனை அழைத்துக்கொண்டு
வருக என்றுசொல்லி அனுப்பினான்.

     அவரை என்பது பண்டறி சுட்டு. ஓலை எடுத்துச் செல்லற்குரிய
தூதுவர் என்பதுஉணரப்பட்டது.                                  76