தைலம் ஆட்டு படலம் - 1998
தசரதன் தேவியர் அழுது துயருறுதல்
தேவிமார் அனைவரும் வந்து புலம்புதல்
அறுசீர் விருத்தம்
1998.
ஆழி வேந்தன் பெருந்தேவி
அன்ன பன்னி அழுது அரற்ற,
தோழி அன்ன சுமித்திரையும்
துளங்கி ஏங்கி உயிர் சோர,
ஊழி திரிவது எனக் கோயில்
உலையும் வேலை, மற்று ஒழிந்த
மாழை உண்கன் தேவியரும்,
மயிலின் குழாத்தின் வந்து இரைத்தார்.
ஆழிவேந்தன்பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற -
சக்கரவர்த்தியின் மூத்தபட்டத்தரசியாகிய கோசலை அப்படிப்பட்ட
வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி அழுதுபுலம்ப; தோழி
அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர்சோர - அவளுடைய
உயிர்த்தோழியாகிய சுமித்ரையாகிய இளைய பட்டத்தரசியும் நிலைகுலைந்து
புலம்பி உயிர் தளர;ஊழி திரிவது என - பிரளயகாலத்தில் உலகம்
கழல்வது போல; கோயில் உலையும்வேலை -அரண்மனை
நிலைதடுமாறுடம் போது ; மற்று -; ஒழிந்த மாழை உண்கண்
தேவியரும்- மிகுந்துள்ள அறியாமை கொண்ட மை உண்ட
கண்ணையுடைய அறுபதினாயிரம் தேவிமார்களும்; மயிலின்குழாத்தின்-
மயிற்கூட்டம் போல; வந்து -; இரைத்தார் -கூச்சலிட்டுப் புலம்பினர்.
மற்று - பிறிது என்னும் பொருளில் வந்த இடைச்சொல். 69
