தைலம் ஆட்டு படலம் - 1983
சுமந்திரன் செய்தி சொல்லக் கேட்ட வசிட்டன்
சொல்லும் செயலும் (1983-1984)
1983.
கடிகை ஓர் இரண்டு மூன்றில்,
கடி மதில் அயோத்தி கண்டான்;
அடி இணை தொழுதான், ஆதி
முனிவனை; அவனும், உற்ற
படி எல்லாம் கேட்டு, நெஞ்சில்
பருவரல் உழந்தான்; முன்னே
முடிவு எலாம் உணர்ந்தான், ‘அந்தோ!
முடிந்தனன், மன்னன்’ என்றான்.
கடிகை ஓர் இரண்டு மூன்றில் - ஐந்து நாழிகைப் போதில்;
கடிமதில்அயோத்தி கண்டான் - காப்பமைந்த மதிலையுடைய அயோத்தி
நகரத்தை அடைந்து; ஆதிமுனிவனை - வசிட்டனை; அடி இணை
தொழுதான் - பாதத்தில் வணங்கினான்; அவனும்- வசிட்ட முனிவனும்;
உற்றபடி எலாம் கேட்டு - வனத்தில் நடந்தவையெல்லாம்கேட்டறிந்து;
நெஞ்சில் பருவரல் உழந்தான் - மனத்தில் துக்கம் கொண்டு வருந்தி;
முன்னே முடிவு எலாம் உணர்ந்தான் - இனி வரப் போவதை எல்லாம்
உணர்ந்தவனாய்; ‘அந்தோ முடிந்தனன் மன்னன்’ என்றான் - ஐயோ!
அரசன் இறந்து போனான் என்றான்.
இராமன் திரும்பாமல் வனம் சென்றுவிட்டான் என்ற செய்தியைச்
சுமந்திரன் மூலம் அறிந்த வசிட்டன் ‘இனி அரசன் இறந்து போவது உறுதி’
என்கின்ற கருத்தில்‘முடிந்தனன் மன்னன்’ என்றான். ‘தெளிவின்கண்
எதிர்காலம் இறந்தகாலம் ஆயிற்று; காலவழுவமைதி. ஐந்து நாழிகை இரண்டு
மணி. கடிகை - நாழிகை. 54
