தைலம் ஆட்டு படலம் - 1975
1975.
கூட்டினன் தேர்ப் பொறி; கூட்டி, கோள்முறை
பூட்டினன் புரவி; அப் புரவி போம் நெறி
காட்டினன்; காட்டி, தன் கல்வி மாட்சியால்
ஓட்டினன், ஒருவரும் உணர்வுறாமலே.
(சுமந்திரன்) தேர்ப் பொறி - தேராகிய பொறியை; கூட்டினன் -
தயார்செய்தான்; கூட்டி - அவ்வாறு ஆயத்தம் செய்து; புரவி -
குதிரைகளை; கோள் முறை - கொள்ளுகின்ற முறையிலே; பூட்டினன் -
தேரில் பூட்டினான்; அப்பரவி போம் நெறிகாட்டினன் - அந்தக்
குதிரைகளுக்குப் போகும் வழியைக்காண்பித்தான்; ஒருவரும் உணர்வு
உறாமல் - (உறங்குகின்ற உடன் வந்த நகர மாந்தர்)ஒருவரும் சிறிதும்
உணராதபடி; தன் கல்வி மாட்சியால் - தன் தேரொட்டும் கல்விச்
சிறப்பால்; ஓட்டினன் - (ஒலியில்லாமல்) ஓட்டினான்.
குதிரைகளைத் தேரிற் பூட்டுங்கால் சேணம் இட்டுக் கண்ணை
மறைப்பர் ஆதலின், ‘போம்நெறி காட்டினன்’ என்றார். இனி, தேர் சென்ற
கவடுகறைக் காட்டிச் சென்றான் என்றல் இங்குச்சிறப்பின்மை அறிக.
கூட்டினன் - கூட்டி, காட்டினன் - காட்டி, என்று ஒன்றை ஒன்று சொற்கள்
தொடர்தலின் ‘ஏகாவளி’ என்னும் அலங்காரமாம். ‘கோள் முறை’ என்பது
குதிரைகள் வலம், இடம்பூட்டும் முறையாகும். ‘ஏ’ காரம் ஈற்றசை. 46
