தைலம் ஆட்டு படலம் - 1970
சுமந்திரன் இலக்குவனைச் செய்தி கூறுக எனல்
1970.
ஆறினன்போல் சிறிது
அவலம், அவ் வழி,
வேறு இலா அன்பினான்,
‘விடை தந்தீக’ எனா
ஏறு சேவகன் - தொழுது,
இளைய மைந்தனை,
‘கூறுவது யாது?’ என,
இனைய கூறினான்;
வேறு இலா அன்பினான்- (சிறிதும்) வேறுபடாத அன்புடையவனாகிய
சுமந்திரன்; அவ் வழி- அவ்விடத்து; அவலம் சிறிது ஆறினன் போல்-
துயரம் சிறிது தெளிந்தவன் ஆகி; (இராமனிடம்), ‘விடை தந்தீக’ - விடை
கொடுத்தருளுக; எனா -என்று சொல்லி (விடை பெற்று); ஏறு சேவகன்
தொழுது - வீரனாகிய இராமனை வணங்கி; இளைய மைந்தனை -
இலக்குவனை; ‘கூறுவது யாது - (அரண்மனை சென்று) சொல்ல
வேண்டுவது என்ன;’ என - என்று கேட்க; இனைய - (பின்
வருவனவற்றை) இத்தகையசொற்களை; கூறினான் - அவன் சொன்னான்.
இராமன், சீதை இருவர்பாலும் செய்தி அறிந்த சுமந்திரன்
இலக்குவனையும் அதுபோல்வினாவினான். 41
