தைலம் ஆட்டு படலம் - 1933
தாமரை குவிதல்
1933.
பகுத்த வான் மதி கொடு பதுமத்து அண்ணலே
வகுத்த வாள் நுதலியர் வதன ராசிபோல்,
உகுத்த கண்ணீரினின் ஒளியும் நீங்கின,
முகிழ்த்து, அழகு இழந்தன, முளரி ஈட்டமே.
பகுத்த வான் மதிகொடு - பிளந்த வானத்துச் சந்திரனைக் கொண்டு;
பதுமத்துஅண்ணல் - பிரமதேவன்; வகுத்த - செய்தமைத்த; வாள்
நுதலியர் -ஒளிபடைத்த, நெற்றியை உடைய அயோத்தி மகளிரது; வதன
ராசி போல் - முகங்களின்தொகுதி போல; முளரி ஈட்டம் - தாமரை
மலர்க் கூட்டம்; உகுத்த -சிந்திய; கள் நீரினில் - கள்ளாகிய நீரோடு;
ஒளியும் நீங்கின -நிறத்தையும் இழந்து; முகிழ்த்து - குவித்து; அழகு
இழந்தன -.
பிரமன் படைக்கும்போது சந்திரனை இரண்டாகப் பிளந்து அமைத்தது
போல உள்ளது பெண்கள்நெற்றி என்றார். சில மகளிரது நெற்றியைப்
பிறை ‘எனச் சொல்வர். சிலரது நுதலைப்‘பாதிமதி’ எனக் கூறுவது புலவர்
கற்பனை மரபு. “மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் பசுவெண்திங்கள்
தோன்றியாங்குக், கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்” (குறுந். 129.) என்பது
காண்க.அட்டமிச் சந்திரன் என்பது ‘அரை நிலவு’ அன்றோ.
அயோத்திநகர மகளிர் முகம் இராமன்வனம் புகுந்தபடியால் அழுது
அழுது கண்ணீரோடு ஒளியிழந்து சாம்பி அழகு கெட்டுள்ளது போல,
தாமரையும் உள்ளது. கண்ணீர் என்பதனை மகளிர்க்குக் கொள்ளுங்கால்
ஒன்றாகவும், தாமரைக்குக்கொள்ளுங்கால் ‘கள்+ நீர் எனப் பிரித்தும்
கொள்க. இது பிரிமொழிச் சிலேடை. ஒளிநீங்கல், முகிழ்த்தல், அழகு
இழத்தல் ஆகியவை செம்மொழிச் சிலேடை. இது சிலேடை உவமையணி
யாதலும் உணர்க. ‘அண்ணலே’ ‘ஏ’ தேற்றம்; ‘ஏ’ ஈற்றசை. 4
